Last Updated : 10 Aug, 2020 09:18 AM

 

Published : 10 Aug 2020 09:18 AM
Last Updated : 10 Aug 2020 09:18 AM

கரோனா இல்லாத 100 நாட்களைக் கடந்த நியூஸிலாந்து: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்; நடந்தது எப்படி?


கரோனா வைரஸுக்கு உலகில் பெரும்பாலான நாடுகள் அஞ்சி ஒவ்வொரு நாளையும் கடத்திவரும் நிலையில் எந்தவிதமான கவலையும், அச்சமும் இன்றி, கரோனா இல்லாத 100 நாட்களை நியூஸிலாந்து கடந்துள்ளது.

தென் பசிபிக் கடலில் 50 லட்சம் மக்களைக் கொண்டிருக்கும் நியூஸிலாந்து தீவில் மக்கள் கடந்த 100 நாட்களாக கரோனா வைரஸ் அச்சம் இன்றி மகிழ்ச்சியாகவும், சமூக விலகல் இன்றியும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

கூட்டமாக அமர்ந்து ரக்பி போட்டிகளை பார்க்கின்றனர், கால்பந்து போட்டிகளை பார்த்து ரசிக்கின்றனர், சினிமா தியேட்டர், ஷாப்பிங் மால்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் இருக்கிறது.

உணவகங்கள், கேளி்க்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்தாலும் கடந்த 100 நாட்களில் எந்தவிதமான கரோனா நோயாளியும் புதிதாக இல்லாமல் நியூஸிலாந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

நியூஸிலாந்துக்குள் அந்நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் மட்டும் கடந்த 3 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளார்கள். அவர்களும் எல்லையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு 14 நாட்களுக்குப்பின் அனுப்பிவைக்கப்பட்டதால், கரோனா அச்சம் இல்லை.

ஓஸ்னியாவில் இருக்கும் குட்டி நாடான நியூஸிலாந்தையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்திலிருந்து அங்கு 1,500 பேர் பாதிக்கப்பட்டனர், 22 பேர் உயிரிழந்தனர். ஆனால், தீவு நாடாக இருப்பதால் அங்கு வரும் தங்கள் நாட்டு மக்களைத் தவிர சுற்றுலாப்பயணிகள் மட்டுமே பெரும்பாலும் வருவார்கள். அவ்வாறு வருவோரையும் கண்டிப்பாக 14நாட்கள் தனிமைப்படுத்தி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.

கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடையும் முன்பே பிரதமர் ஜெசிந்தா துணிச்சலாக நடவடிக்கை எடுத்து எல்லைகளை மூடினார். தங்கள் நாட்டு மக்களைத் தவிர பிறநாட்டவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அந்நாட்டு மக்கள் வந்தாலும் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருந்து அதன்பின் பரிசோதனைக்கு பின்பு நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் படிப்படியாக கரோனா கட்டுக்குள் வந்து, கரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது.

இதுகுறித்து ஒடாகோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பேராசிரியர் மைக்கேல் பேக்கர் கூறுகையில் “ நியூஸிலாந்து நாட்டில் கடந்த 100 நாட்களாக எந்தவிதமான புதிய கரோனா நோயாளியும் உருவாகவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த நியூஸிலாந்து மக்கள்தான் நியூஸிலாந்துக்குள் வந்துள்ளார்கள். அவர்களும் முறைப்படி தனிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளதால் கரோனா அச்சம் இல்லை.

மக்களுக்கு சிறந்த அடிப்படை அறிவியல் அறிவு, திறமையான, சரியான முடிவுகளை எடுக்கும் தலைமைதான் நியூஸிலாந்தை மற்ற நாடுகளிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதைக் காட்டிலும், நியூஸிலாந்து அரசு, அதை ஒழிக்கவே அதிகமான அக்கறை செலுத்தி துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தது.

இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் நியூஸிலாந்து நாட்டின் செயல்பாடுகளையும், நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை கேட்கிறார்கள்.

ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதிலும், அழிப்பதிலும் தவறான நடவடிக்கைகளைக் கையாண்டுவிட்டன. இப்போது தங்கள் செயல்பாடுகளை எண்ணி வேதனைப்படுகிறார்கள், உணர்கிறார்கள்.

மனிதர்களின் உயிரைக் காப்பதா அல்லது நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பதா என்ற முடிவு எடுப்பதில் தவறான இடைவெளியைக் கண்டுவிட்டார்கல். நோயின் உண்மை நிலவரம் பற்றி அறிந்து முடிவெடுத்திருந்தால் வர்த்கம் பாதிக்கப்பட்டிருக்காது.

மற்ற நாடுகள் நினைத்தைவிட நியூஸிலாந்து நாட்டின் பொருளதாரம் சிறப்பாகத்தான் இருக்கிறது. நாட்டின் வேலையின்மை நிலவரம் 4 சதவீதத்துக்குள்தான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

நியூஸிலாந்து நாடு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியது,கடந்த 100 நாட்களாக கரோனா இல்லாத தேசமாக மாற்றியிருப்பதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் தலைமை முக்கியக் காரணம் என்று மக்கள் நம்புகிறார்கள், புகழ்கிறார்கள்.

நியூஸிலாந்து நாட்டில் ஊரடங்கு இருந்தபோது, நாள்தோறும் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் ஜெசிந்தா, நாட்டில் நிலவரம் குறித்தும் அனைத்து விவரங்களையும் தெரிவித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் ஜெசிந்தாவின் சுதந்திர தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நியூஸிலாந்து நாட்டின் சுற்றுலாத்துறை கரோனாவில் கடுமையாகப் பாதி்க்கப்பட்டுள்ளது என்று சிலர் குற்றச்சாட்டு வைத்தாலும், உலகில் மிகவும் ஒதுங்கிய நிலையில், தொலைவில் இருக்கும் நியூஸிலாந்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவுதான் என்பதை மறுக்க முடியாது.

இருப்பினும் தங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை முறைப்படி தனிமைப்படுத்தி, அதன் பின்புதான் நாட்டுக்குள் நியூஸிலாந்து அரசு அனுமதித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x