

ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து புர்கினோ பாசோ அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், “புர்கினோ பாசோவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபடா என் கவுர்மா கிராமத்தில் அமைந்துள்ள சந்தையில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் புர்கினா பாசோ கிராமம் ஒன்றின் சந்தையில் கூடியிருந்த பொதுமக்களை நோக்கி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியாகினர்.
புர்கினா பாசோவும், அண்டை நாடுகளான மாலி மற்றும் நைஜரும், அடிக்கடி ஜிகாதி தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சஹேல் பிராந்தியத்தில் தீவிரவாத வன்முறை பரவத் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
ஐ.நா.வைப் பொறுத்தவரை, கடந்த மூன்று ஆண்டுகளில் இங்கு நடந்த ஜிகாதி தாக்குதல்களில் சுமார் 4,000 பேர்வரை கொல்லப்பட்டனர்.