பாகிஸ்தானில் சர்வதேச விமான சேவை 9 ஆம் தேதி முதல் தொடக்கம்

பாகிஸ்தானில் சர்வதேச விமான சேவை 9 ஆம் தேதி முதல் தொடக்கம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் சர்வதேச விமான போக்குவரத்து வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியுடன் தொடங்க இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் டான் செய்தி வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி முதல் இயங்க உள்ளது. சர்வதேச விமான சேவைகள் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இயக்கப்படும். உள்ளூர் விமான சேவைகள் அனைத்து பகுதிகளிலும் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது.

பாகிஸ்தானில் 2,80,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

முன்னதாக பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10 -ம் தேதி தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து விமான போக்குவரத்து அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.

இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள பஞ்சாப், சிந்து மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in