Published : 07 Aug 2020 05:57 PM
Last Updated : 07 Aug 2020 05:57 PM

உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்து: ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யும் ரஷ்யா

உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்ஹைல் முரஸ்கோ கூறும்போது, “உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. 2020 அக்டோபர் முதல் தடுப்பூசி மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி தொடர்பான அனைத்துச் செலவுகளும் மாநில பட்ஜெட்டில் அடங்கும்.

இந்தத் தருணத்தில் மூன்றாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை முயற்சிகள் மிக முக்கியம். நாங்கள் தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் பரவியது. தற்போது உலக முழுவதும் சுமார் 1.9 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x