Last Updated : 07 Aug, 2020 09:43 AM

 

Published : 07 Aug 2020 09:43 AM
Last Updated : 07 Aug 2020 09:43 AM

அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செல்போன் செயலிகளுக்கு தடை: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம்

வாஷிங்டன்

சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த தனித்தனியாக இரு தடை உத்தரவுகளும் அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும்.
சீனாவின் டிக்டாக், வீசாட் உள்பட 106 செல்போன் செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இந்தியா முதன்முதலில் தடை விதித்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரி்க்க அரசும், குடியரசுக் கட்சி எம்.பி.க்களும் வெகுவாகப் பாராட்டினர்.

அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்த நிலையில் நேற்று தடை உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த தடை உத்தரவுகுறித்து அதிபர் ட்ரம்ப் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
சீன நிறுவனங்கள் உருவாக்கிய செல்போன் செயலிகள் அமெரிக்காவில் பரந்து கிடக்கின்றன. இந்த செயலிகளால் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

இந்த நேரத்தில், ஒரு குறிப்பிட்ட செயலியின் செயல்பாட்டை பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் தேவை இருக்கிறது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக்கொள்கிறது.

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்வற்றை செயலி மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதைத் கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும்.

இந்த அச்சுறுத்தலால் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிடுகிறேன். இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த தடை உத்தரவை அமல்படுத்த வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் அளிக்கிறேன்.

அதேபோல சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீசாட் சமூக வலைத்தளம், மற்றும் பணம் அணுப்பும் தளத்தையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

டிக்டாக், வீசாட் இரு செயலிகளும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை தானாகவே எடுத்துக்கொள்ளக் கூடியவை. அமெரிக்கர்கர்களின் தனிப்பட்ட விவரங்களை அறிய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவுபவை. இரு உத்தரவுகளும் அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்குவரும்.


இவ்வாறு அதிபர் ட்ரம்ப் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x