

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம், “லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது.
இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு நேற்று வரை 70 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் பலி எண்னிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துறைமுக கிடங்கில் அம்மோனியம் நைட்ரேட் வைத்திருந்தது தொடர்பாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெய்ரூட் நகர அரசு தெரிவித்துள்ளது.
பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓட்டல் மற்றும் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லெபனானில் நடைபெற்ற இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்கியுள்ளன.
இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையும் லெபனான் அரசுக்கு உதவ முன்வந்துள்ளது.