சீனாவில் பூச்சிகள் மூலம் புதிய வைரஸ் தொற்று: 7 பேர் பலி, 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என எச்சரிக்கை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸிலிருந்து சீனா மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பூச்சிகள்(நச்சு ஈ, வண்டுகள், உண்ணி) மூலம் புதிய வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பூச்சிகள் மூலம் பரவும் வைரஸால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர், 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்த பூச்சிகள் மூலம் பரவும்வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக, சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அரசின் தி குளோபல் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சு மாநிலத்தில் இதுவரை 37-க்கும் மேற்பட்டோரும், அன்ஹூ மாநிலத்தில் 23 பேரும் எஸ்எப்டிஎஸ் எனும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த ஒரு பெண் இந்த எஸ்எப்டிஎஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல், இருமலுடன் சிகிச்சை பெற்றார். இந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பெண்ணின் ரத்த பிளேட்லெட்டுகள் தொடர்ந்து குறைந்து வருவதைக் கண்டறிந்து சிகிச்சையளித்து குணமடைய வைத்தனர்.

இது தவிர கிழக்கு சீனாவில் உள்ள ஹிஜியாங் மாகாணம், மற்றும் அன்ஹூ மாகாணத்தில் இதுவரை 7 பேர் இந்த எஸ்எப்டிஎஸ் வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

எஸ்எப்டிஎஸ் வைரஸ் சீனாவுக்கு புதிதானது இல்லை. கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து சீனாவில் இருக்கும் இந்த வைரஸ் பன்யாவைரஸ் பிரிவைச் சேர்ந்ததாகும். அதாவது உண்ணி, நச்சு ஈ, வண்டுகளில் இருந்து அது மனிதர்களைக் கடித்தல் மூலம் பரவும் வைரஸாகும்.

ஹிஜியாங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் ஹெங் ஜி பாங் கூறுகையில் “எஸ்எப்டிஎஸ் வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. ஒரு நோயாளியின் உடலில் ரத்தம், சளி மூலம் மற்றவருக்கு பரவும் தன்மை உடையது. ஆதலால், மக்கள் பூச்சிக் கடிகள் மூலம் கவனமாக இருத்தல் வேண்டும், மற்றவகையில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் போன்று மனித குலத்துக்கு எஸ்எப்டிஎஸ் வைரஸ் புதிதானது அல்ல. கடந்த 2011-ம் ஆண்டிலிருந்தே சீனாவில் இருந்து வருகிறது என்றாலும் இப்போது திடீரென பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. எஸ்எப்டிஎஸ் வைரஸ் என்பதன் விரிவாக்கம் தீவிர காய்ச்சலுடன் ரத்த பிளேட்லெட்டுகளை பாதிக்கும் நோயாகும்( Severe Fever with Thrombocytopenia Syndrome).

இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு தீவிரமான காய்ச்சல், ரத்த சிவப்பு அணுக்கள் குறைதல், வெள்ளை அணுக்கள் குறைதல், வயிறு தொடர்பான சிக்கல்கள், உடல்தசை வலி, நரம்புரீதியான பிரச்சினைகள் போன்றவை வரலாம்.

இந்த வைரஸ் பெரும்பாலும் சீனா, தைவான்,ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in