Published : 14 May 2014 10:00 AM
Last Updated : 14 May 2014 10:00 AM

லஞ்ச வழக்கில் இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 6 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எகுத் உல்மர்ட்டுக்கு (68) 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லஞ்ச வழக்கில் முன்னாள் பிரதமர் ஒருவர் சிறைத் தண்டனைக்கு ஆளாவது இஸ்ரேலிய வரலாற்றில் இதுவே முதல் முறை. 2006 முதல் 2009 வரை இஸ்ரேல் பிரதமராக இருந்தவர் எகுத் உல்மர்ட். இவர் ஜெருசலேம் நகர மேயராக இருந்தபோது, ‘ஹோலி லேண்ட்’ என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் குடியிருப்புகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து உல்மர்ட் 1 லட்சத்து 60 ஆயிரம் டாலர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்அவிவ் மாவட்ட நீதிமன்றம் உல்மர்ட் குற்றவாளி என கடந்த மார்ச் மாத இறுதியில் அறிவித்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் உல்மர்ட்டுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 3 லட்சம் டாலர் அபராதமும் விதித்து நீதிபதி டேவிட் ரோஸன் தீர்ப்பு வழங்கினார். தொடக்கம் முதலே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் உல்மர்ட், இத்தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.

“அடிப்படைத் தவறின் விளைவாக இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் மேயராக நேர்மையான நிர்வாகத்தை அளித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இத்தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன்” என்றார் அவர்.

வழக்கறிஞரான உல்மர்ட் 1973-ல் இஸ்ரேலிய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மிக இளம் வயதில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை பெற்றார். கேபினட் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2006-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் உல்மர்ட், அப்போதைய பிரதமர் ஏரியல் ஷரோனின் பல்வேறு துணிச்சலான நடவடிக்கைக்கு காரணமாக கருதப்பட்டார். இவரை இஸ்ரேலில் மிகச் சிறந்த அரசியல்வாதியாக டைம் இதழ் குறிப்பிட்டது.

2008-ல் உல்மர்ட் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்யலாம் என போலீஸ் பரிந்துரை செய்ததை தொடர்ந்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும் 2009 வரை பதவியில் நீடித்தார். இவரைத் தொடர்ந்து பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த பிரதமராக பதவியேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x