

பெய்ரூட் வெடி விபத்து குண்டுவெடிப்பால் நிகழ்த்தப்பட்ட பயங்கரத் தாக்குதல்போல் உள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக ட்ரம்ப் தெரிவித்தார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 3 லட்சம் பேர் வரை வீடற்றவர்களாகி உள்ளனர்.
லெபனானில் நடைபெற்ற இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ''பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தில் 70 பேர் பலியான சம்பவம் குண்டுவெடிப்பால் நிகழ்த்தப்பட்ட பயங்கரத் தாக்குதல்போல் உள்ளது என்று அமெரிக்க ராணுவத் தளபதிகள் கூறுகின்றனர்'' என்றார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, ''அந்த விபத்தைப் பார்க்கும்போது அவ்வாறுதான் இருந்தது'' என்று ட்ரம்ப் பதிலளித்தார்.
பெய்ரூட் வெடி விபத்து நிகழ்ந்தபோது முதலில் குண்டுவெடிப்பு என்று பரவலாகச் செய்திகள் வெளியான. மேலும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நாங்கள் இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று இஸ்ரேல் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.