Last Updated : 05 Aug, 2020 08:48 AM

 

Published : 05 Aug 2020 08:48 AM
Last Updated : 05 Aug 2020 08:48 AM

லெபனானின் பெய்ரூட் நகரையே உருக்குலைத்த மிகப்பெரிய வெடிவிபத்து: 70 பேர் பலி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்: என்ன காரணம்?

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை 78க்கும் மேல் என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 4000 என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்தால் தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. போரின்போது ஏதோ மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது போன்று நகரமே கோரமாக காட்சியளிக்கிறது.

பெய்ரூட் நகரில் இருந்த ஒரு கோட்டை முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. பெய்ரூட் நகரில் நடந்த இந்த வெடிவிபத்து நில அதிர்வில் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டுள்ளது, ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நகரத்துக்கும் இந்த சத்தம் கேட்டு, அதிர்வு உணரப்பட்டுள்ளது.

வெடிவிபத்துக்குப் பின் ஆரஞ்சு நிறத்தில் வானில் சென்ற புகை.

ஏற்கெனவே கரோனா வைரஸ் பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் லெபனான் நாடு திண்டாடிவரும் நிலையில் இந்த வெடிவிபத்து பேரிடியாக அமைந்துள்ளது. இந்த வெடிவிபத்து நடந்தபின் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வந்து சாலையிலும், வீடுகளிலும் கிடக்கும் உடல்களைக் கொண்டு சென்றவாறு இருந்தன.

சிறிது நேரத்தில் மருத்துவமனைகளில் அனைத்து இடங்களும் நிரம்பியதால், காயமடைந்தவர்களைச் சாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெய்ரூட் நகரில் நடந்தது வெடிவிபத்தா அல்லது இஸ்ரேல் நடத்திய தாக்குதலா என்ற கேள்வி வெடிச்சத்தம் கேட்டதும் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், தாங்கள் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தவில்லை, எங்கள் விமானம் அங்கு செல்லவில்லை என்று இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால், பெய்ரூட் நகரில் உள்ள பழையான கோட்டையில் இருந்து ஆரஞ்சு நிறத்தில் புகை மிகப்பெரிய அளவில் மேகக்கூட்டம் போல் வெடிச்சத்தம் கேட்டபின் மேலே எழுந்தது என்று அதைப் பார்த்த மக்கள் தெரிவித்தனர், பல்வேறு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

காயமடைந்த மக்கள் சாலையில் ஓடிய காட்சி.

இந்த வெடிச் சத்தம் கேட்டபின் நகரில் இருந்த வீடுகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த கதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிக் கதவுகள் பல கி.மீ. தொலைவுக்குத் தூக்கி வீசப்பட்டன.

இந்த வெடிவிபத்துக்கு உண்மையான காரணம் இதுவரை அந்நாட்டு அரசால் முழுமையாகக் கண்டுபிடித்து வெளியிடப்படவில்லை.

ஆனால், முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பெய்ரூட் நகரில் உள்ள பழமையான கோட்டையில் மிகப்பெரிய வெடிமருந்து கிட்டங்கியை அரசு செயல்படுத்தி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கடற்பகுதியில் ஒரு கப்பலை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது, அதில் இருந்த ஏராளமான ஆபத்தான வெடிமருந்துகள் இந்தக் கோட்டையில் சேமித்து வைக்கப்பட்டன. இந்த வெடிமருந்து வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பெய்ரூட்டில் உள்ள தொலைக்காட்சி சேனல் எல்பிசி வெளியிட்ட செய்தியில், “வெடித்தவுடன் மஞ்சள் நிறத்தில் புகை மேலே எழும்பியது. இது சோடியம் நைட்ரேட் போன்று இருந்தது. அதன் மணம் நச்சுத்தன்மை கொண்ட நைட்ரஜன் டைஆக்ஸைடு போன்று இருந்தது” எனத் தெரிவித்தது.

இஸ்ரேல், ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கு இடையே தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வெடிவிபத்து நடக்க சில நிமிடங்களுக்கு முன் வானில் ஒரு விமானம் பறந்து சென்றதால், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவிட்டதாக மக்கள் பதற்றம் அடைந்தனர். ஆனால், இஸ்ரேல் இதை மறுத்துவிட்டது.

பெய்ரூட்டில் இதற்கு முன் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. உள்நாட்டுப் போர், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் , இஸ்ரேல் தாக்குதல் என பல நடந்துள்ளன. ஆனால், அனைத்தையும் மிஞ்சும் வகையில் இந்த வெடிவிபத்து இருக்கிறது என்று நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த மக்கள் சாலையில் கிடத்தப்பட்டுள்ள காட்சி.

சாலையில் சென்றோர், வாகனத்தில் சென்றோர், வீடுகளில் ஓய்வு எடுத்தோர், கடைகளில் குழுமி இருந்த மக்கள் அனைவரும் இந்தத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். ரத்தமும், சதையுமாகவும், உடைந்த கை கால்களுடன், சாலையில் மக்கள் கிடத்தப்பட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் ஹமாத் கூறுகையில், “இந்த வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு அவசர மீட்புக் குழுக்கள் பெய்ரூட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. காயமடைந்தவர்கள் வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த மோசமான வெடிவிபத்தால் பெய்ரூட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளும் மோசமாகச் சேதமடைந்தன. இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க முடியாத நிலையில் வேறு நகரத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

பெய்ரூட் கடற்கரையில் கரோனா வைரஸ் சூழலில் உதவுவதற்காக ஐ.நா. அமைதிக்குழுவின் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வெடிவிபத்தில் அந்தக் கப்பலும், கப்பலில் இருந்த ஏராளமான பணியாளர்களும் மோசமாகக் காயமடைந்துள்ளனர் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x