

ராமர் கோயில் பூமி பூஜை நாளை நடைபெறுவதை ஒட்டி, அமெரிக்கக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்த உள்ளதாக அங்குள்ள இந்து சமூகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பூமி பூஜை நடைபெறும் நேரத்தில் வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட அமெரிக்க இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. இதனால், மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 5-ம் தேதியான நாளை பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி, அமெரிக்கக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. பூமி பூஜை நடைபெறும் நேரத்தில் வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட அமெரிக்க இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன் கேபிடோல் ஹில் பகுதியில், ராமர் கோயில் டிஜிட்டல் படங்களைச் சுமந்து வாகனம் ஒன்று உலா வர உள்ளது. இத்தகவலை அங்குள்ள இந்து சமூகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல நியூயார்க் பகுதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் நாளை பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்படும் எனவும் அங்கு ராமரின் புகைப்படங்கள், அயோத்தி ராமர் கோயிலின் முப்பரிமாணப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.