

கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்ப, மக்கள் அதிர்ச்சிகளுக்கு இடையில் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ் ஸ்பெயினை விட்டே வெளியேற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால் அவர் திங்கள் அறிவிப்புக்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் மக்களுக்கு இந்த ஊழல் குற்றச்சாட்டுகளினால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஏனெனில் மன்னர் யுவான் கார்லோஸ் அங்கு பிரபலமானவர், மக்கள் நன்மதிப்பை பெற்றவர். ஆகவே அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா, அல்லது இங்கு சட்டத்தின் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமா என்பதில் அந்நாட்டு மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
அதிவேக ரயில் திட்டத்தில் கடும் ஊழல், லஞ்ச லாவண்யக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் மன்னர், 82 வயது யுவான் கார்லோஸ் மற்றும் இவரது மகன் பிலிப் ஆகியோரின் பெயர்கள் சிலவாரங்களாக அடிபடத்தொடங்கியதில் இருவருக்கும் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டன.
இது தொடர்பாக மன்னர் மாளிகை வெளியிட்ட செய்தியில் மன்னர் யுவான் கார்லோஸ் தன் மகன் பிலிப்பிற்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி நான் ஸ்பெயினை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனும் தந்தை கார்லோஸின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
1975-ல் ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ மரணமடைந்த பிறகு ஆட்சியைப் பிடித்த கார்லோஸ், ஸ்பெயினை எதேச்சதிகாரப் பிடியிலிருந்து ஜனநாயகப் பாதைக்கு திருப்பியவர் என்ற அளவில் மிகவும் மதிக்கப்பட்டார். ஆனால் இவரது புகழ் வரிசையாக எழுந்த ஊழல் புகார்களினால் அதன் பிறகு சிதிலமடைந்தது.
இந்நிலையில் இவர் ஏற்கெனவே வெளியேறி லிஸ்பனில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இருப்பதாக போர்த்துக்கீசிய தொலைக்காட்சி கூறுகிறது, ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதிவேக ரயில் ஒப்பந்தத்திற்காக சவுதி அரசரிடமிருந்து மன்னர் யுவான் கார்லோஸ் 100 மில்லியன் டாலர்கள் தொகை பெற்றதாக கடந்த மார்ச்சில் குற்றச்சாட்டு எழுந்தது, இதனையடுத்து தொடர்ந்து இவர் மீது லஞ்ச, ஊழல் புகார்கள் எழுந்தன, இதில் பெற்ற பணத்தை தன் முன்னாள் காதலிக்கு அனுப்பியதாக ஸ்பானிய ஊடகங்கள் அலறின.
இத்தாலி துணை பிரதமர், இடது சாரியான பாப்லோ இக்லீசியஸ் கூறும்போது யுவான் கார்லோஸ் ஸ்பெயினில் தங்கியிருக்க வேண்டும். ஒரு மன்னருக்கு இது அழகல்ல என்று சாடியுள்ளார்.
இந்நிலையில் மன்னர் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று ஒரு தரப்பு தொடர்ந்து கூறிவருகிறது, இன்னொரு தரப்பு இதனை உறுதி செய்யவில்லை.