

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றால் அமெரிக்காவில் டிக் டாக் செயலியைத் தடை செய்வோம் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதேசமயம், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக் டாக்கை, அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பின், சீன நிறுவனமான டிக் டாக், ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 47 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செயலியைத் தடை செய்யும் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கும் அச்சறுத்தல் இருப்பதாகக் கூறி குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் பலர் டிக் டாக் செயலியைத் தடை செய்ய வலியுறுத்தினர், அதிபர் ட்ரம்ப்புக்கும் கடிதம் எழுதினர்.
இந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது டிக் டாக் செயலிக்குத் தடைவிதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அதிபர் ட்ரம்ப் பதில் அளிக்கையில், “ஆம், டிக் டாக் செயலிக்குத் தடைவிதிக்கப் போகிறோம். மற்ற சில விஷயங்களையும் செய்ய இருக்கிறோம். இரு வாய்ப்புகள் உள்ளன. நிறைய விஷயங்கள் நடக்க வேண்டியுள்ளன. என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம்” எனத் தெரிவி்த்தார்.
இதற்கிடையே ப்ளூம்பெர்க் நியூஸ், மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு வெளியிட்ட செய்தியில், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் அந்த நாளேடுகள் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
டிக் டாக் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், “ஊகச் செய்திகளுக்கும், வதந்திகளுக்கும் நாங்கள் பதில் அளிக்கப்போவதில்லை. டிக் டாக் செயலியை நீண்டகாலத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட டிக் டாக் செயலி இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.