

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 3-வது இடத்தை மெக்சிகோ பிடித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனாவில் 1,56,747 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசலில் 92 ஆயிரத்து 568 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 3-வது இடத்தில் பிரிட்டன் இருந்து வந்தது. ஆனால், நேற்று மெக்சிகோவில் நிகழ்ந்த உயிரிழப்புக்குப் பின் பிரிட்டனை அந்நாடு முறியடித்துள்ளது. பிரிட்டனில் கரோனாவில் 46 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மெக்சிகோ நாட்டில் நேற்று ஒரே நாளில் 688 பேர் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 46 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது.
மெக்சிகோவில் கரோனாவில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கரோனா பாதிப்பில் 7-வது இடத்தில் இருந்தாலும், உயிரிழப்பில் 3-வது இடத்துக்கு மெக்சிகோ நகர்ந்துள்ளது.
ஆனால், தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், ஆளும் அரசு முறையாகக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மெக்சிகோவில் உள்ள மாநிலங்களில் 9 கவர்னர்கள் ஆளும் அரசை கரோனா விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.