

காங்கோ தீவிரவாத குழுவின் தலைவர் ஜெர்மைன் கடங்காவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
காங்கோ ஜனநாயக குடியரசு (டி.ஆர். காங்கோ) நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு பொகோரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டனர். எப்.ஆர்.பி.ஐ. என்ற இனவாத தீவிரவாதக் குழு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது. மேலும் 2005-ல் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டதிலும் இந்தக் குழுவுக்கு தொடர்பு இருந்தது.
இந்நிலையில் இக்குழுவின் தலைவராக ஜெர்மைன் கடங்கா காங்கோவில் 2005-ல் கைது செய்யப்பட்டார். 2007-ல் கடங்கா சர்வதேச நீதிமன்ற விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். பொகோரோ கிராமத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக கடங்கா மீது கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் கடங்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் நேற்று 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. கடங்கா கடந்த 7 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக இருப்பதால் இக்காலத்தை தண்டனையில் இருந்து கழித்துக் கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பாலியல் பலாத்காரம், சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து கடங்காவை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். என்றாலும் இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கடங்காவின் வழக்குரைஞர் கூறினார்.