

பிலிப்பைன்ஸில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கூறும்போது, “தலைநகர் மணிலா உட்பட கரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. முதியவர்கள், குழந்தைகள் வெளியே வரவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், வணிகங்கள், உடற்பயிற்சிக் கூடங்களின் செயல்பாடுகள் ஆகஸ்ட் மாதம் வரை கட்டுப்படுத்தப்படும்” என்றார்.
மேலும், கரோனா தடுப்பு மருந்துகள் இந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்றால் முதலில் ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், போலீஸ் மற்றும் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் சீனாவுக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பிலிப்பைன்ஸ் அரசு முன்னரே அறிவித்து இருந்தது.
பிலிப்பைன்ஸில் இதுவரை 85,486 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,962 பேர் பலியாகி உள்ளனர்.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.