சீனா உளவு பார்ப்பதாக பகிரங்க குற்றச்சாட்டு: எஸ்-400 ஏவுகணை ‘டெலிவரி’யை நிறுத்தியது ரஷ்யா

சீனா உளவு பார்ப்பதாக பகிரங்க குற்றச்சாட்டு: எஸ்-400 ஏவுகணை ‘டெலிவரி’யை நிறுத்தியது ரஷ்யா

Published on

கரோனா வைரஸ் பரவிய பிறகு சீனா மீது உலக நாடுகள் அதிருப்தியில் உள்ளன. அத்துடன், இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தி, எல்லைப் பிரச்சினையை தூண்டி உள்ளது. இதுபோன்ற சீனாவின்நடவடிக்கைகளால் மற்ற நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால், சீனாவின் நட்பு நாடாக ரஷ்யா கருதப்படுகிறது.

ஆனால், ரஷ்யாவை சீனா உளவு பார்ப்பதாகவும், ரஷ்ய உளவாளி மூலம் ஏராளமான ரகசிய தகவல்களை சீனா பெற்றுள்ளதாகவும் சமீபத்தில் ரஷ்யா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. இந்நிலையில், சீனாவுக்கு வழங்க இருந்தஎஸ்-400 ரக ஏவுகணைகள் டெலிவரியைநிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. எப்போது வழங்கப்படும் என்ற தகவலையும் ரஷ்யா வெளியிடவில்லை. இதனால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது.

‘‘ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, கரோனா வைரஸ் ஒழிப்புக்கான சீனா நடவடிக்கையில் தொய்வை ஏற்படுத்தும். மேலும், இது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணைகள், உலகிலேயே அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வகை ஏவுகணைகள் தரையில் இருந்து வானில் வரும் எதிரி இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்க கூடியவை. வானில் 400 கி.மீ. தூரத்தில் வரும் எதிரி இலக்கையும் எஸ்-400 ஏவுகணைகள் தாக்கி அழிக்கும். இந்த ஏவுகணைகள் தரையில் இருந்து வானில் 30 கி.மீ. உயரம் வரை செல்லும் திறன் படைத்தவை.

இந்த ஏவுகணைகள் கொள்முதல் தொடர்பாக ரஷ்யாவுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, கடந்த 2018-ம்ஆண்டு சில ஏவுகணைகளை சீனாவுக்குரஷ்யா வழங்கியது என்று ரஷ்யாவின் ‘டாஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவுடன் ரஷ்யா நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி ரஷ்யா சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு துணை பிரதமர் யூரி இவானோவிச் போரிசோவ்வை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவுக்கு தொடர்ந்து ராணுவ தளவாடங்களை ரஷ்யா வழங்கும் என்று போரிசோவ் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in