Published : 31 Jul 2020 07:03 AM
Last Updated : 31 Jul 2020 07:03 AM

கரோனாவால் நொடிந்து போன கம்பெனிக்கு வழங்கிய ரூ.30 கோடி கடனில் லம்போர்கினி சொகுசு கார் வாங்கி தொழிலதிபர் மோசடி: கைது செய்து விசாரிக்கிறது அமெரிக்க அரசு

வாஷிங்டன்

உலக நாடுகளிலேயே கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகளால் அமெரிக்காவின் ஏராளமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அதில் இருந்து மீள்வதற்காக, ‘பெடரல் பேசெக் புரட்டக் ஷன் புரோகிராம் (பிபிபி) திட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வங்கி கடனுதவி திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி, புளோரிடாவைச் சேர்ந்த டேவிட் டி ஹைன்ஸ் (29 வயது) என்ற இளம் தொழிலதிபருக்கு 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.30 கோடி) கடனை வங்கி வழங்கியது. அந்தப் பணத்தில் கம்பெனி ஊழியர்களின் சம்பளம், இதர செலவுகள், தொடர்ந்து கம்பெனியை மேம்படுத்தலாம் என்று வங்கி கூறியது.

ஆனால் வங்கி வழங்கிய கடன் பணத்தில், நீல நிறத்தில் லம்போர்கினி சொகுசு கார் வாங்கினார். சொகு ஓட்டல்களில் தங்கினார். புளோரிடாவின் மியாமி கடற்கரையில் சந்தோஷமாக சுற்றினார். அவர் வாங்கிய சொகுசு காரின் விலை 3 லட்சத்து 18 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.2.50 கோடி). தகவல் அறிந்த அதிகாரிகள் டேவிட்டை கைது செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிபிபி திட்டத்தின் கீழ் வங்கி வழங்கிய கடனை, சட்டவிரோதமாக சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்தி உள்ளார் டேவிட். அவர் மீது வங்கி மோசடி உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

அமெரிக்காவில் கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்கவும், நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் பில்லியன் கணக்கில் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டேவிட் போலவே பல நிறுவனங்களின் உரிமையாளர்களும் வங்கி கடனைப் பெற்று முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x