ராஜஸ்தானில் இருந்து லண்டனுக்கு கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டு நடராஜர் சிலை மீட்பு: இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது
இந்தியாவில் இருந்து லண்டனுக்கு கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம், பரோலி நகரில் உள்ள கடேஸ்வர் கோயிலில் இருந்து கடந்த 1998-ம் ஆண்டு அரிய பிரதிஹாரா நடராஜர் (சிவன்) சிலை கொள்ளையடிக்கப்பட்டு, லண்டனுக்குக் கடத்தப்பட்டது. நடராஜர் சதுரா வடிவத்தில், ஜடா மகுடத்தில், திரிநேத்ரா கோலத்தில் காட்சியளிக்கும் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை 4 அடி உயரமுள்ளது. இந்த சிலை லண்டனுக்கு கடத்தப்பட்டிருப்பது 2003 -ம் ஆண்டுதான் தெரியவந்தது.
இதையடுத்து, லண்டன் தூதரக அதிகாரிகள், அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் சிலையைக் கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். கடந்த 2005-ம் ஆண்டு இந்த சிலையை வைத்திருந்தவர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தாமாகவே முன்வந்து ஒப்படைத்தார். சிலையை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டுவர இந்திய அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்தனர். கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் சென்ற இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், அந்த சிலை கடேஸ்வர் கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட 9-ம் நூற்றாண்டு சிலை என்பதை உறுதிப்படுத்தினர்.
பின்னர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் பிரிட்டன் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் சிலை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்திய கலாச்சார, பாரம்பரிய விஷயங்களைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறித்தும், அதற்குரிய விசாரணை, சட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பிரதிஹாரா நடராஜர் சிலை இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நடராஜர் சிலை இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்து மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் கடத்தப்பட்ட பல்வேறு சிலைகள் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமாக மீட்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து இதற்கு முன் பிரம்மா - பிரம்மானி சிலை கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. டெல்லியில் உள்ள புரானா கிலா அருங்காட்சியகத்தில் இருந்து இந்தச் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் வெண்கலச் சிலை கடந்த 2018-ம் ஆண்டு மீட்கப்பட்டு கடந்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
