ஆப்கானிஸ்தானில் வீட்டுக்குள் புகுந்து தாய், தந்தையை சுட்டுக் கொன்ற தலிபான் தீவிரவாதிகளுடன் மீண்டும் சண்டையிட தயார்: பதிலுக்கு 2 பேரை சுட்டுக்கொன்ற 15 வயது சிறுமி ஆவேசம்

கமார் குல்
கமார் குல்
Updated on
2 min read

காஸ்னி

‘‘பெற்றோரைக் கொன்ற தலிபான் தீவிரவாதிகளுடன் மீண்டும் சண்டையிட தயார்’’ என்று 15 வயது சிறுமி ஆவேசத்துடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் கோர் மாகாணத்தில் உள்ளது டய்வாரா மாவட்டம். இங்குள்ள ஒரு கிராம மக்கள் அரசுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இன்பார்மர்களாக இருப்பதாக தலிபான் தீவிரவாதிகள் சந்தேகப்படுகின்றனர். இதனால் தினமும் கிராமத்துக்குள் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி கமார் குல் என்பவர் வீட்டுக்குள் சமீபத்தில் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கிருந்த குல்லின் தாய், தந்தையைச் சுட்டுக் கொன்றனர். அதிர்ச்சியில் அலறிய குல், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து தலிபான் தீவிரவாதிகளை சரமாரியாக சுட்டார். இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மற்றவர்கள் ஓடிவிட்டனர்.

தலிபான்கள் மீது துணிச்சலாக தாக்குதல் நடத்திய கமார் குல்லுக்கு ஆப்கானிஸ்தான் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. அவருடைய படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. தற்போது உறவினர் வீட்டில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் உள்ள குல், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசியில் அவர் கூறிய தாவது:

சம்பவத்தன்று இரவு தலிபான் தீவிரவாதிகள், எங்கள் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தனர். அவர்களை தடுக்க என் தாய் முயற்சித்தார். நான் அப்போது மற்றொரு அறையில் 12 வயது சகோதரனுடன் உறங்கிக் கொண்டிருந்தேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறிக் கொண்டு வெளியே வந்தேன். தலிபான்கள் சுட்டதில் எனது பெற்றோர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அதிர்ச்சி யில் அலறினேன். எனக்கு கோபம் அதிகரித்தது.

உடனடியாக வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அங்கிருந்த தலிபான் தீவிரவாதிகளைப் பார்த்து சரமாரியாக சுட்டேன். அப்போது, கும்பலின் தலைவன் போல் இருந்த ஒருவன், எங்கள் மீது துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் என்னிடம் இருந்த துப்பாக்கியை சகோதரன் பிடுங்கி அவன் மீது சுட்டான். இதில் அவன் காயம் அடைந்தான். உடனடியாக அங்கிருந்து அவனும் மற்றவர் களும் ஓடிவிட்டனர்.

என் பெற்றோரைக் கொன்றவர்களை நான் கொன்று விட்டேன். அது பெருமையாக இருக்கிறது. தலிபான்கள் ஓடிவிட்ட பிறகு, எனது தாய், தந்தை அருகில் வந்து அவர்களிடம் பேச முயற்சித்தேன். ஆனால், அவர்கள் இறந்துவிட்டனர். அவர்களிடம் கடைசியாக ஒரு வாரத்தை கூட பேச முடியவில்லை என்று வேதனையாக இருக்கிறது. அதேநேரத்தில் என்னையும் எனது சிறிய சகோதரனையும் கொல்வதற்கு தலிபான்கள் மீண்டும் வருவார்கள் என்பதும் எனக்கு தெரியும்.

இதற்கிடையே, கிராம மக்களும் பாதுகாப்புப் படையினரும் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர். இனிமேல் தலிபான் தீவிரவாதிகளைப் பற்றிய பயம் எதுவும் எனக்கு இல்லை. என்னைக் கொல்வதற்கு அவர்கள் வந்தால், மீண்டும் சண்டையிடுவதற்குத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு குல் கூறியுள்ளார். வீட்டில் குல்லின் தந்தை ஏகே-47 துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை சுடுவது எப்படி என்று குல்லுக்கும் கற்றுத் தந்திருக்கிறார்.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், ‘‘குடும்ப பிரச்சினை காரணமாக குல் வீட்டில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதி களில் ஒருவர் குல்லின் சொந்த கணவர்’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. திருமணமான பிறகு தாய் வீட்டுக்கே குல் வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு குல்லை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல அவரது கணவர் முயற்சித்தார் என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், குல்லின் தந்தை கிராமத் தலைவராக இருந்தார். அரசுக்கு ஆதரவாக அவர் இருந்ததால், தலிபான்கள் அவரை சுட்டுக் கொன்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் குல்லுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தலிபான்களைச் சுட்டுக் கொன்ற குல்லை ஆப்கன் அரசு பாதுகாக்க வேண்டும். அவரை ஆப்கானிஸ்தானில் இருந்து பத்திரமாக வேறு நாட்டுக்கு மாற்றி பாதுகாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

குல்லின் துணிச்சலான செயலை ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி வெகுவாகப் பாராட்டி உள்ளார். குல்லின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார் என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் செடிக் செடிக்கி நேற்று கூறினார். இதற்கிடையே, ‘‘கிராமத்தில் தாக்குதல் நடந்தது உண்மைதான். ஆனால், தலிபான்கள் யாரையும் அந்தச் சிறுமி சுட்டுக் கொல்லவில்லை’’ என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in