Published : 31 Jul 2020 06:37 AM
Last Updated : 31 Jul 2020 06:37 AM

செவ்வாய் கிரகத்துக்கு அடிக்கிறது யோகம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் நம்பிக்கை என்ற பொருள் தரும் 'அல் - அமல்' விண்கலம், சொர்க்கம் குறித்த கேள்விகள் என்ற பொருள் தரும் சீனாவின் தியான்வென் -1 (Tianwen 1), 'விடாமுயற்சி' என்ற பொருள் தரும் பெர்சிவரன்ஸ் (Perseverance) என்கிற ரோவர் ரோபோ விண்கலத்தை ஏந்தி செல்லும் அமெரிக்காவின் 'மார்ஸ் 2020’ ஆகிய 3 விண்கலங்களும் இந்த மாதம் செவ்வாயை நோக்கி சீறி பாய்கின்றன.

செவ்வாய் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தி செயற்கையாக ஆக்ஸிஜன் தயாரிப்பது, பொம்மை ஹெலிகாப்டர் போன்ற ஒரு வாகனத்தை பறக்க விடுவது, சிறப்பு கருவி கொண்டு நிலத்துக்கு 100 மீட்டர் அடியில் நீர் பனிக்கட்டி முதலியவை உள்ளதா என ஆராய்வது, அடுத்த 2 ஆண்டுகள் தினந்தோறும் செவ்வாயின் வானிலையை கண்காணிப்பது போன்ற பல நுணுக்க ஆய்வுகளை இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளும்.

ஏன் ஒரே நேரத்தில்?

நான்காவதாக ரஷ்யாவும் ஐரோப்பிய யூனியனும் இணைந்து எசஸ்ஸோ மார்ஸ் என்ற விண்கலத்தையும் செவ்வாய் நோக்கி இந்த மாதம் ஏவ இருந்தார்கள். ஆனால், கரோனா வைரஸ் தொற்று காரணமாகத் திட்டத்தைத் தள்ளிப் போட்டுள்ளனர். அனைவரும் ஒரே நேரத்தில் ஏன் செவ்வாய் நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார்கள்?

வீசிய பந்து நேர்கோட்டில் செல்லாமல் பரவளைய பாதையில் மேலே எழும்பி பின்னர் கீழே விழுவது போல செவ்வாய் நோக்கி ஏவப்படும் விண்கலம், சூரியனை சுற்றும் நீள்வட்ட பாதையில் தான் பயணம் செய்யும். செவ்வாய் பாதையை அடையும் போது அதே புள்ளியில் செவ்வாய் கிரகம் இருந்தால் அதைச் சென்றடையும்.

இல்லை என்றால் மேலே எறிந்த கல் கீழே விழுவது போலச் சூரியனை சுற்றி திரியும். விண்கலத்தின் நீள்வட்ட பாதை மற்றும் சூரியனை சுற்றி வரும் செவ்வாயின் பாதை இரண்டும் சந்திக்கும் இடத்தில் விண்கலம் செல்லும் போது சரியாக அங்கே செவ்வாய் வர வேண்டும். எய்த அம்பு சென்று சேரும் போது அந்தப் புள்ளியில் பறக்கும் பறவை வந்து சேருமா எனக் கணக்கிட்டு வேடன் குறி பார்ப்பது போல விண்கலத்தின் பயணக் காலத்தின் இறுதியில் சூரியனை சுற்றி வரும் செவ்வாய் கோள் இருக்கும் இடம் எது எனக் கணக்கிட்டு ஏவ வேண்டும்.

சூரியன், பூமி செவ்வாய் ஆகிய 3 வான் பொருட்களும் நேர்கோட்டில் உள்ள போதுதான் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான தொலைவு குறைவாக இருக்கும். அன்று செவ்வாய் சூரியனுக்கு எதிர்நிலையில் அமையும். பூமி சூரியனை 365 நாட் களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது ஆனால், செவ்வாய்க்கு ஒரு சுற்று சுற்றி வர 687 நாட்கள் எடுக்கும். எனவே சுமார் 26 மாதங்களுக்கு ஒரு முறை பூமியும் செவ்வாயும் நெருங்கி வரும்.

இந்த ஆண்டு அக்டோபர் 13 அன்று இரவு சூரியனுக்கு எதிர்நிலையில் செவ்வாய் அமைகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு 6 மாத காலம் கடந்த பின்னர் விண்கலங்கள் செவ்வாயை அடையும். எதிர்நிலையில் அமைவதற்கு சுமார் 3 மாதம் முன்னர் புறப்பட்டால் குறைந்த ஆற்றலில் செவ்வாயை சென்று அடையலாமென ஹோமான் (Hohmann) என்ற விஞ்ஞானி கணக்கிட்டு கூறினார். எனவேதான் இதற்கு முன்னர் இதே போன்ற சாதக நிலை அமைந்த 2018 மே மாதத்தில் இன்சைட் என்ற விண்கலமும் அதற்கு முன்னர் மார்ச் 2016-ல் எசஸ்ஸோ மார்ஸ் என்ற விண்கலமும் செலுத்தப்பட்டன. இதே போல ஏற்பட்ட சாதக நிலையில்தான் 2013-ல் இந்தியாவின் மங்கள்யான் மற்றும் அமெரிக்காவின் மெவன் விண் கலங்கள் செலுத்தப்பட்டன.

நம்பிக்கை

அமீரகத்தின் கன்னி விண்வெளி முயற்சி இது. பல சிற்றரசர்கள் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் உருவான 50-வது ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக இந்த விண்வெளி பயணம் அமைகிறது. அமீரகத்தின் ஆய்வு நிறுவனத்தில் அல்-அமல் விண்கலம் உருவாக்கப்பட்டிருந்தாலும் தங்களிடம் விண்ணில் ஏவுவதற்கு ராக்கெட் ஏவூர்தி இல்லை என்பதால் ஜப்பானின் H-IIA ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 19, 2020 அன்று ஏவப்பட்டது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயை அடையும் இந்த விண்கலம் அந்த கோளைச் சுற்றி வரும் செயற்கை கோள் போல இயங்க தொடங்கும். நீள்வட்ட பாதையில் செவ்வாயை சுற்றி வரும் போது அந்த விண்கலத்தில் உள்ள அகச்சிவப்பு கதிர் நிறமாலை மானி மற்றும் புகைப்படக் கருவி கொண்டு செவ்வாய் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு மற்றும் புற ஊதாக்கதிர் நிறமாலை மானி கொண்டு மேல் அடுக்கு வானிலை நிலவரங்களை 2 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து தகவல் திரட்டும்.

ஐம்பத்தி ஐந்து மணி நேரத்துக்கு ஒருமுறையெனச் சுற்றும் இந்த விண்கலம் நீள்வட்ட பாதையில் செல்வதால் செவ்வாயை கிட்ட நெருங்கியும் தொலைவில் இருந்தும் புகைப்படம் எடுக்க முடியும். ஓட்டை விழுந்த பலூனில் இருந்து காற்று வெளியேறுவது போல ஒரு காலத்தில் பூமியின் வளிமண்டலம் போல அடர்த்தியாக இருந்த செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் விண்வெளிக்கு கசிகின்றன. அல் அமல் ‘நம்பிக்கை' விண்கலத்தின் உதவியோடு இந்த புதிரை ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள்.

அண்ட சராசர வினாக்கள்

நவம்பர் 2011 ரஷ்யாவின் ராக்கெட்டில் துணை பயணியாகப் பயணம் செய்து செவ்வாயை அடைய சீனா எடுத்த முதல் முயற்சி தோல்வியைத் தழுவினாலும் மனம் தளராமல் தியான்வென் -1 விண்கலத்தைச் செவ்வாய் நோக்கி ஏவியுள்ளது. மொத்தம் 13 ஆய்வுக் கருவிகளை ஏந்தி செல்லும் இந்த விண்கலத்தில் 3 பகுதிகள் உள்ளன.

வரும் பிப்ரவரி மாதம் செவ்வாயை அடையும் விண்கலம் முதலில் இரண்டாகப் பிரியும். ஆர்பிட்டர் எனும் கோள் சுற்றி தாய் விண்கலம் செவ்வாயை சுற்றி வரும். சேய் கலம் செவ்வாயின் தரை பரப்பில் பாராசூட் உதவியுடன் இறங்கும். தரையை தொட்டதும் சேய் கலத்தில் இருந்து ரோவர் எனும் ரோபோ கார் போன்ற வாகனம் செவ்வாயின் பரப்பில் அங்கும் இங்கும் சென்று அதன் நிலவியல் மற்றும் கனிமங்கள்குறித்த ஆய்வு செய்யும்.


வற்றிய ஆறு, வறண்ட எரி, நீர் பசை இழந்த ஓடை போன்ற பல்வேறு நிலவியல் அமைப்பு கொண்டு விஞ்ஞானிகள் முன்னொரு காலத்தில் செவ்வாயில் தரை பரப்பில் கடலும் ஏரிகளும் ஆறுகளும் இருந்தன என்று யூகம் செய்கின்றனர். அந்த நீரெல்லாம் வற்றியது எப்படி? எங்கே சென்றது நீர் என்பது இன்னமும் நீடிக்கும் மர்மம். தரைக்கு மேலே இருந்த நீர் நிலத்துக்கு அடியில் சென்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். கோள் சுற்றி விண்கலத்தில் உள்ள ஒரு ரேடார் கருவி தரையின் கிழே 100 மீட்டர் ஆழம் வரை உள்ள பொருட்கள், குறிப்பாக நீர் பசை குறித்து ஆராய்ச்சி செய்யும். ரோவர் ரோபோ காரில் உள்ள கருவி, நீர் ஓடிச் செல்வதால் ஏற்படும் நிலவியல் தடயங்களை, குறிப்பாக சேகரிக்கும்.

விஸ்வரூப வெற்றி

ஏற்கெனவே பல ரோபோ கார் விண்கலங்களைச் செவ்வாயில் வெற்றி கரமாகத் தரையிறக்கி ஆராய்ச்சி செய்துள்ள அமெரிக்கா, நூதனமான பேர்சிவரன்ஸ் ‘விடாமுயற்சி' ரோபோ ரோவரை தரையிறக்க உள்ளது. முதன் முறையாக சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை சுமந்து செல்லும். அங்கே இங்கே பறந்து செவ்வாயின் நிலபரப்பு குறித்து ஆய்வுகளை ஹெலிகாப்டர் மேற்கொள்ளும். இந்த ரோபோ கலம் செவ்வாயின் தரை பரப்பில் துளை செய்து நிலவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும். மேலும் செவ்வாயின் மண் கல் பரிசோதனை மாதிரிகளை சேகரித்து வைத்துக் கொள்ளும். சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு விண்கலம் செவ் வாயில் தரையிறங்கி இந்தக் கல் மண் மாதிரிகளை பொதி சுமந்து பூமிக்கு திரும்பும்.
இந்த ரோபோ காரில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவி ஒன்று பொருத்தப் பட்டுள்ளது. எதிர்காலத்தில் செவ் வாய்க்கு மனிதர்களைத் தாங்கிய விண்கலம் சென்றால் அங்கே ஆக்ஸிஜன் பெறுவது எப்படி என்ற கேள்விக்கு விடை தரும் வகையில் செவ்வாய் காற்றில் செறிவாக உள்ள கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்து மரம் தாவரங்களைப் போல ஆக்ஸிஜனை வெளியே விடும். இந்தக் கருவியின் செயல் திறனைப் பரிசோதனை செய்யும். இந்தக் கருவி மற்றும் ரோபோ காருக்கு ஆற்றல் தரச் சிறிய அணு மின் உற்பத்தி கருவி யையும் ஏந்தி செல்கிறது.

செவ்வாயில் மனிதன்

தற்போது கியூரியாஸிடி எனும் ரோவர் ரோபோ கார், இன்சைட் எனும் தரையிறங்கி விண்கலம் மற்றும் இந்தியாவின் மங்கள்யான் உட்பட 6 விண்கலங்கள் செவ்வாயை ஆராய்ச்சி செய்து கொண்டிருன்றன. புதுமை அறிவியல் கருவிகளை ஏந்தி செல்லும் இந்த 3 விண்கலங்களும் செவ்வாய் குறித்த நமது அறிவை மேலும் விசாலமாக்கும்.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்வது முதல் எதிர்காலத்தில் மனித குடியிருப்புக்களை ஏற்படுத்தி வாழ்வது என பல கனவுகள் உள்ளன. மனிதன் அங்கே வாழ வேண்டும் என்றால் நீர், ஆக்ஸிஜன் போன்றவை தேவை. செவ்வாயில் எங்கே நீர் கிடைக்கும் எங்கே வானிலை சாதகமாக இருக்கும் என்னென்ன சவால்கள் ஏற்படும் போன்ற பல தகவல்களைத் தரும் இந்த ஆய்வுகள் எதிர்கால மனித பயணங்களுக்கு முதல் படி.

கட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார்,
அறிவியல் தொழில்நுட்பத் துறை, புதுடெல்லி
தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x