

அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடத்தப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம், நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமர் உருவத்தையும், அயோத்தி கோயிலின் 3டி உருவத்தையும் விளம்பரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த நாளை உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த விளம்பரம் ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இதன் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், பூமி பூஜை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 5-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமரின் உருவப் படம் விளம்பரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கான விவகாரக் குழுவின் தலைவர் ஜெகதீஸ் சேவானி பிடிஐ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரதமர் மோடி அங்கு சென்று பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதை நாங்களும் கொண்டாடும் வகையில் நியூயார்க்கில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நாளைக் கொண்டாடும் வகையில் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள 17 ஆயிரம் அடி சதுர எல்இடி விளம்பரப் பலகை, நாஸ்டாக் ஸ்க்ரீன் ஆகிய பகுதிகளை அன்று ஒருநாள் வாடகைக்கு முற்றிலும் எடுத்துள்ளோம். அன்று முழுவதும் எந்த விதமான வர்த்தக விளம்பரமும் வராது.
ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 5 மணி முதல் இரவு 10 மணி முதல் கடவுள் ராமர் படத்தையும், அயோத்தி ராமர் கோயில் குறித்த 3டி படமும் மட்டுமே வெளியிடப்படும். ஜெய் ஸ்ரீ ராம் என்று இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு ஒளிபரப்பப்பட்டு, உருவப் படங்கள் விளம்பரப்படுத்தப்படும்.
உலக அளவில் புகழ்பெற்ற இடம், உலக மக்கள் கூடும் இடமான டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோயில், ராமர் குறித்த விளம்பரம் செய்யப்படும்போது உலகத்தின் கவனம் ஈர்க்கப்படும். அன்றைய தினம் ஏராளமான இந்தியர்கள் டைம்ஸ் சதுக்கத்தின் முன்பு கூட உள்ளனர், மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாட உள்ளனர்.
இது வாழ்க்கையில் ஒருமுறை, நூற்றாண்டில் ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி. ராமருக்கான கோயில் கட்டுவதை இங்கு தவிர வேறு எங்கும் சிறப்பாகக் கொண்டாட முடியாது.
உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்களின் கனவான பிரதமர் மோடி தலைமையின் கீழ், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது உண்மையாகிறது. 6 ஆண்டுகளுக்கு முன், இந்த அற்புதமான நாள் இவ்வளவு விரைவாக வரும் என நாங்கள் நினைத்ததில்லை. பிரதமர் மோடியின் தலைமை காரணமாக, அந்த நாள் வந்திருக்கிறது. இந்த நாளை நாங்கள் மிகவும் உற்சாகமாகக் கொண்டாட விரும்புகிறோம்''.
இவ்வாறு ஷேவானி தெரிவித்தார்.