

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. இதற்காக ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகின்றன.
ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், அதிபர் ட்ரம்ப்பின் கரோனா வைரஸ் கையாள்கை, மற்றும் நிறவெறி உள்ளிட்ட நிர்வாகச் சேர்கேடுகளில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்ய இவருக்கான ஆதரவு பெருகி வருகிறது.
மாறாக அதிபர் ட்ரம்ப் கரோனா வாக்சினை நம்பியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரச்சாரம் ஒன்றில் அதிபர் ட்ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் பெண் ஒருவர் வீட்டுக்குள் திருடர்கள் நுழைகின்றனர். அந்தப் பெண் உடனே தொலைபேசியில் போலீஸைத் தொடர்பு கொள்கிறார். ஆனால் அதில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட செய்தி மட்டுமே வருகிறது. அந்தப் பெண்ணுக்கு உதவி கிடைக்கவில்லை.
இந்த வீடியோவை காட்டி ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான் ஆகும் என்று அதிபர் ட்ரம்ப் பேசினார்.
ஆனால் இது தனக்கு எதிராகவே திரும்பும் என்று ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை.
அதாவது இப்போது நடப்பதோ ட்ரம்ப் ஆட்சி, இதில் பெண்ணுக்கு போலீஸ் உதவி கிடைக்கவில்லை என்பது யாருடைய ஆட்சியில்? ஜோ பிடனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உள்ளிட்ட கேள்விகளுடன் ட்ரம்ப் மீது கடும் விமர்சனங்கள் அங்கு எழுந்துள்ளன.
இவ்வாறு சொந்தச் செலவிலேயே சூனியம் வைத்துக் கொள்வது என்று கூறுவார்களே அது ட்ரம்புக்கு நடந்துள்ளது என்று அங்கு சமூக வலைத்தளங்களில் கேலி பேசப்பட்டு வருகிறது.