

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 2019-20-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளனர். இவர்களில் அதிக அளவாக 38,209 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 60 சதவீதம் கூடுதலாகும். இந்தியர்களை தொடர்ந்து பிரிட்டின் நாட்டினர் (25,011), சீனர்கள் (14,764) மற்றும் பாகிஸ்தானியர்கள் (8821) இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை பொறுப்பு அமைச்சர் ஆலன் டட்ஜ் கூறும்போது, “ஆஸ்திரேலிய குடிமகனாக மாறுவது என்பது இங்குவாழ்வதையும் வேலை செய்வதையும் விட உயர்வானது. இது எங்கள் நாட்டுக்கும், மக்களுக்கும், மதிப்பீடுகளுக்கும் விசுவாசமாக இருப்பதற்கான உறுதிமொழி ஆகும்” என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் 2016-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய வம்சாவளியினர் 6,19,164 பேர் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 2.8 சதவீதம்.