Published : 23 Sep 2015 10:45 AM
Last Updated : 23 Sep 2015 10:45 AM

உலக மசாலா: பக்தி கஷ்டம் அறியாது!

சீனாவில் உள்ள செங்குவான் மலையில் ஒரு கோயில் இருக்கிறது. 130 பேர் மலையடிவாரத்தில் இருந்து 3 மணி நேரம் கைகளாலும் கால் முட்டிகளாலும் தவழ்ந்து சென்று, கோயிலை அடைந்திருக்கிறார்கள். இதில் 81 வயது முதியவர் முதல் 3 வயது குழந்தை வரை கலந்துகொண்டுள்ளனர். 3 தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இவர்களுடன் மற்றவர்களும் சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டனர். கைகளும் கால்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் இவர்கள் தங்கள் செயலைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பக்தி கஷ்டம் அறியாது...

இன்றைய காலகட்டத்தில் பணம் இல்லாமல் எதையும் செய்ய இயலாது. ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதியர் ஒரு வருடம் முழுவதும் பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள்! 24 வயது ரேச்சல் நியுபையும் 26 வயது லியாம் குல்பர்ட்சனும் ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரு வருடம் பணம் இன்றி வாழ்ந்திருக்கிறார்கள். நண்பரின் தோட்டத்தில் தேவையற்ற பொருட்கள், மரக்கட்டைளை வைத்து ஒரு சிறிய வீட்டை உருவாக்கினார்கள். தோட்டத்தில் உணவுப் பயிர்களைப் பயிரிட்டனர். தாங்கள் விளைவித்த காய்கறிகளையும் தானியங்களையும் அருகில் இருக்கும் விவசாயிகளிடம் கொடுத்து, அவர்களிடம் இருக்கும் உணவுப் பொருட்களைப் பண்டமாற்றம் செய்துகொண்டனர்.

‘‘5 வாத்துகளை வளர்த்து முட்டைகளை உணவாக்கிக்கொண்டோம். விவசாய வேலை, சமையல் வேலை, தண்ணீர் கொண்டு வருவது, துவைப்பது என்று நாள் முழுவதும் வேலை சரியாக இருக்கும். எங்கள் பரிசோதனை மூலம் பணம் இல்லாமலும் மனிதர்களால் வாழ முடியும் என்று இந்த உலகத்துக்குப் புரிய வைத்திருக்கிறோம். இது கொஞ்சம் கஷ்டமான வாழ்க்கைதான். ஆனால் எல்லாவற்றையும் நம் உழைப்பு மூலம் பெறும்போது அதில் கிடைக்கும் நிம்மதி, பணம் கொடுத்து வாழும் வாழ்க்கையில் இருப்பதில்லை’’ என்கிறார்கள் இந்தத் தம்பதியர்.

இதற்கு முன்பு கனடாவில் ஒரு வருடம் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அங்கே உறைபனி, விவசாயம் செய்ய முடியாத சூழல் என்று நிறையவே கஷ்டங்களை அனுபவித்துவிட்டனர். இந்த ஓராண்டில் 2 தடவை பணத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல். பல் எடுப்பதற்காக லியாம் மருத்துவமனை சென்றபோதும் புது பைக் ஒன்றை நகரத்திலிருந்து எடுத்து வந்தபோதும் பணத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

ரொம்ப அழகா சொன்னதோடு, வாழ்ந்தும் காட்டியிருக்கீங்க...

ஜப்பானிய பெண்கள் வேலை, வீடு என்று அதிக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைத்து விடுவதற்காகவே ‘இகேமெசோ’ என்ற நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே படித்த, தோற்றப் பொலிவு மிக்க 7 இளைஞர்கள் இருக்கிறார்கள். மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் இவர்களைத் தொடர்புகொள்ள வேண்டும். 7 இளைஞர்களில் யார் வரவேண்டும் என்பதையும் பெண்களே முடிவு செய்து சொல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்துக்கோ, வீட்டுக்கோ இளைஞர் வருவார்.

அவரிடம் மனம் விட்டுப் பெண்கள் பேசுகிறார்கள். இளைஞர் அனைத்தையும் சிரத்தையுடன் கேட்டுக்கொள்வார். பெண்கள் கண்ணீர் விடவில்லை என்றால், அழுகை வரவழைக்கக் கூடிய திரைப்படம் ஒன்றைப் போட்டுக் காட்டுவார். தங்கள் சோகமும் திரைப்பட சோகமும் ஒன்று சேர, இப்பொழுது பெண்கள் கதறி அழுவார்கள். மென்மையான கைக்குட்டை மூலம் கண்ணீரைத் துடைத்துவிடுவார். ஆறுதல் கூறுவார். அவர்கள் பிரச்சினைக்குத் தன்னால் முடிந்த தீர்வையும் சொல்வார். எல்லாம் முடியும்போது பெண்களின் மனம் லேசாகி இருக்கும்.

நிம்மதியை உணர்வார்கள். சகோதரனாக, புத்திசாலியாக, வயதானவராக, நகைச்சுவை உணர்வு மிக்கவராக இருக்கும் இளைஞர்களில் பெண்கள் அவர்கள் விரும்பும் இளைஞரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். கண்ணீர் துடைக்கும் ஆண்கள் அமைப்புக்கு ஒருபக்கம் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் இணையதளம் ஆரம்பித்த ஒரே வாரத்தில் ஏராளமான பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘கண்ணீர் தெரபிஸ்ட்’ என்ற லைசென்ஸும் இந்த இளைஞர்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள்.

மனம் விட்டுப் பேசக்கூட அங்கே நட்போ, உறவோ இல்லையா



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x