

சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பான நாடாகவே ஸ்பெயின் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் சில பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதாகவும், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறும் ஜெர்மனி அரசு தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டது.
ஸ்பெயினிலிருந்து வருபவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் இதற்கு ஸ்பெயின் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து ஸ்பெயின் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நாங்கள் இந்தச் செய்தியை நாட்டு மக்களுக்கு நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம். ஸ்பெயினின் சில பகுதிகளில் கரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் அந்த உறுதியை அளிக்கிறோம். சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பாகவே ஸ்பெயின் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.