Published : 28 Jul 2020 06:46 AM
Last Updated : 28 Jul 2020 06:46 AM

பொருளாதார உதவிகள் மூலம் பாகிஸ்தானை கட்டுப்படுத்த சீனா திட்டம்

ஹாங்காங்

பாகிஸ்தான் அரசியலை தனது கட்டுக்குள் வைக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டமிட்டுள்ளதாக ‘ஆசியா டைம்ஸ்’ நாளிதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலி சல்மான் அன்டானி என்பவர் எழுதிய அந்த கட்டுரையின் சாராம்சம் வருமாறு:

சீன அதிபர் ஜி ஜின்பிங், 2016-ம்ஆண்டு சீனா – பாகிஸ்தான் பொருளாதார காரிடார் (சிபிஇசி) எனும் திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டினார். இதற்காக சிபிஇசி ஆணையமும் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையம் பாகிஸ்தானில் கட்டமைப்பு மற்றும் மின்னுற்பத்தி திட்டங்களில் ஈடுபடும். இது முழுக்க முழுக்க சீன அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் ஆணையமாகும்.

சீன அதிபரின் இந்த முயற்சியை முதலில் நவாஸ் ஷெரீப் அரசு நிராகரித்தது. இறுதியில் இந்த திட்டத்தை தற்போதைய பிரதமர் இம்ரான் கான் ஏற்றுக் கொண்டு அனுமதித்தார். ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தானின் திட்ட அமலாக்கத் துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இதை செயல்படுத்த முடிவு செய்தார்.

சீன அதிபரின் திட்டப்படி 2050-ம்ஆண்டில் வளரும் பொருளாதார சந்தை கொண்ட நாட்டில் (பாகிஸ்தான்) சீனாவின் அதிகாரம்தான் முழுமையாக இருக்கும்.

வரும் 2050-ம் ஆண்டில் சுதந்திரமான பொருளாதார வர்த்தகம் என்பது சாத்தியமாக வேண்டுமானால் இதுபோன்ற சில நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று சீனா கருதுகிறது. சீன அதிபரின் உத்தி பிற நாடுகளின் வருங்கால தலைமுறையை முற்றிலுமாக அழித்துவிடும்.

இது தவிர இந்த ஆணையம் அரசியல் சாசனத்தின்படி அதிகாரம் மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அபராதம் விதிப்பது, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது, குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர், அதிபர் ஆகியோர் நேரடியாக தலையீடு செய்ய முடியாது.

ஏற்கெனவே பெரும் நிதி நெருக்கடியில் உழலும் நாடுகளுக்கு கடனுதவி அளித்து அவற்றை மேலும்கடனாளி ஆக்கி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே ஜி ஜின்பிங்கின் திட்டமாகும். பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பிறநாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து பின்னர் உதவுவது சீனஅதிபரின் உத்தியாகும். இத்தகையநாடுகள் தங்கள் நாடுகளுக்குள் சீனாவை நுழைய அனுமதித்து சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வழி ஏற்படுத்தி விடுகின்றன.

தற்போதைக்கு பாகிஸ்தானின் இறையாண்மைக்கு பங்கம் வரும்வகையிலும் சீனஅதிபரின் திட்டங்களை செயல்படுத்தும் விதமாகவும் சிலர் செயல்படுகின்றனர்.

இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x