

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) பிரேசில் அதிபர் தனது பேஸ்புக் பக்கத்தில், “ அனைவருக்கும் வணக்கம் , கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன்” என்று தனது புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்திருக்கிறார்.
கடந்த இரு வாரங்களில் ஜெய்ர் போல்சனோரா செய்துக் கொண்ட நான்காவது கரோனா பரிசோதனை இதுவாகும். கரோனாவிலிருந்து குணமானதைத் தொடர்ந்து போல்சனோராவுக்கு அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜூலை 7 ஆம் தேதி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அவர் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் தான் விரைவில் பணிக்குச் செல்ல வேண்டும், வீட்டில் தனித்திருக்க முடியவில்லை என்று கூறி போல்சனோரா சில நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது கரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா ஏற்கெனவே கூறி வந்தார்.
இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரேசிலில் கரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.