அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு வேலை பார்த்த நபர் சிக்கினார்: தொடர்கிறது அமெரிக்க வேட்டை

அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு வேலை பார்த்த நபர் சிக்கினார்: தொடர்கிறது அமெரிக்க வேட்டை
Updated on
1 min read

அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் சீனாவுக்காக அமெரிக்காவில் சட்ட விரோதமாக உளவு பார்த்ததை ஒப்புக் கொண்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஜுன் வெய் இயோ என்ற இந்த நபரின் இன்னொரு பெயர் டிக்சன் இயோ ஆகும். இவர் சீன உளவு நிறுவனத்துக்கு 4-5 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். முக்கியத் தகவல்களை எடுக்கக் கூடிய அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தி இணையதளம் மூலம் தகவல்களைச் சேகரித்து அவர்களையே அறிக்கை எழுத வைத்து அதை சீனாவுக்கு அனுப்பி வைப்பதுதான் இவரது வேலை.

இதற்காக வேலை வாய்ப்பு நெட்வொர்க்கிங் இணையதளம் ஒன்றின் மூலமும் போலி ஆலோசனை நிறுவனம் மூலமும் அமெரிக்க இளைஞர்களுக்கு வலை வீசி அவர்களை சீன நலன்களுக்குப் பயன்படுத்துவது என்பதுதான் இவரது வேலை என்கிறார் அட்டர்னி ஜெனரல் ஜான் டீமர்ஸ்.

அமெரிக்க சமூகத்தின் திறந்தவெளித்தன்மையை சீனா இப்படித்தான் சுரண்டி வருகிறது என்கிறார் டீமர்ஸ்.

சமீபமாக சீனா மீதான அமெரிக்காவின் கெடுபிடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த நபர் வசமாகச் சிக்கியுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று சீன ராணுவம் தொடர்பான விஞ்ஞானி ஒருவர் தலைமறைவு நிலையிலிருந்து வெளியே வந்து அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்தார். சீன தூதரகங்களே இப்படி உளவு ஸ்தாபனமாகச் செயல்படுகிறது என்றுதான் ட்ரம்ப் நிர்வாகம் ஹூஸ்டன் தூதரகத்தை மூட உத்தரவிட்டது.

இதற்குப் பதிலடியாக செங்டூவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சீனா மூட உத்தரவிட்டது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருந்த சீன உளவாளி இயோ 2015-ல் சீன உளவு அமைப்பால் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அரசியல் தகவல்கள், ரகசிய தகவல்களுக்கு இவருக்கு பணம் அளிக்கப்படும். பிற்பாடு சீனாவின் ராணுவத்துடன் ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளார் இயோ. ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இவர் தொடர்ந்து சீன ராணுவத்துக்கு பணியாற்றி வந்தார்.

ஜனவரி 2019-ல்தான் இவர் அமெரிக்கா வந்துள்ளார். அப்போது இவரது ஆட்கள் தங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் நேரில் சந்திக்க வேண்டுமென்றால் காஃபி ஷாப்பில் சந்திக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.

இந்நிலையில் சீன உளவாளி இயோ எப்படி, எங்கு கைது செய்யப்பட்டார் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இவர் அக்டோபரில் தண்டனை பெறுவார் என்றும் குறைந்தது 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in