Published : 03 Sep 2015 10:39 AM
Last Updated : 03 Sep 2015 10:39 AM

உலக மசாலா: குட்டி ஸ்டீவ் இர்வின்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கிறான் 5 வயது சார்லி பார்கர். இவன்தான் உலகின் இளம் முதலை வேட்டைக்காரன். முதலைப் பண்ணையில் தினமும் தன் பெற்றோருடன் வேலை செய்து வருகிறான். 3 வயதில் இருந்தே முதலைக் குட்டிகளைப் பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டான். பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர்த்து, சீருடையில் முதலைப் பண்ணையில் தன் நேரத்தைச் செலவிடுகிறான்.

ப் விக்டோரியாவில் உள்ள பல்லரட் விலங்குகள் பூங்காவில் தினமும் ஆமை, முதலை, முயல் போன்ற விலங்குகளுக்குத் தன் கைகளால் உணவு கொடுப்பது சார்லியின் முக்கியமான பணி. பெற்றோர் கண்காணிப்பில் ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறான். விலங்குகளைப் பார்ப்பதை விட, சார்லி விலங்குகளைக் கையாள்வதைப் பார்ப்பதற்கு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

குட்டி ஸ்டீவ் இர்வின்!

நெதர்லாந்தில் உள்ள பன்றிப் பண்ணையில் உலகிலேயே முதல் முறை பன்றிப் பாலாடைக்கட்டி தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ பாலாடைக்கட்டியின் விலை ஒன்றரை லட்சம் ரூபாய்! பன்றிப் பண்ணையின் உரிமையாளர் எரிக் ஸ்டெனிக், பல ஆண்டுகள் யோசித்து, பரிசோதித்து பன்றிப் பாலில் இருந்து பாலாடைக்கட்டியை உருவாக்கியிருக்கிறார். மாட்டுப் பாலை விட பன்றிப் பாலில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. ஆனால் பன்றிப் பாலைக் கறப்பதுதான் மிகவும் கடினமான காரியம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை 100 மி.லி. பால் மட்டுமே ஒரு பன்றி சுரக்கும். 10 லிட்டர் பால் கறக்க 40 மணி நேரம் செலவிட வேண்டும். 10 லிட்டர் பாலில் இருந்து 1 கிலோ பாலாடைக் கட்டியைப் பெற முடியும். முதலில் பன்றிப் பாலில் இருந்து பாலாடைக் கட்டி எடுக்கும் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. பல்வேறு விதங்களில் பரிசோதனைகள் செய்து, இறுதியில் பன்றிப் பாலாடைக் கட்டி எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் எரிக். பாலாடைக் கட்டிகளிலேயே மிகவும் சுவையானது பன்றிப் பாலாடைக்கட்டிதான். ஒருமுறை சுவைத்தால் மற்ற பாலாடைக்கட்டிகளை விரும்ப மாட்டார்கள் என்கிறார் எரிக்.

பன்றியின் பாலும் பாலாடைக்கட்டியும் யாரும் யோசித்திருக்கவே மாட்டார்கள்!

சைபீரியாவில் உள்ள ஷோர்ஸ்கி தேசியப் பூங்காவில் 12 வயது சிறுவன் டெனின் அலெக்ஸாண்ட்ரோவ் நடந்துகொண்டிருந்தான். அப்பொழுது ஈர மண்ணில் மிகப் பெரிய மனிதக் காலடித் தடம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டான். தன்னுடையை அப்பாவை அழைத்துக் காட்டினான். அவரும் ஆச்சரியமடைந்தார். காலடித் தடத்துக்கு அருகில் தன்னுடைய காலை வைத்துப் பார்த்தார். சாதாரண மனிதர்களின் காலை விட இரண்டு மடங்குப் பெரிதாக அந்தக் காலடி இருந்தது.

‘‘மிக அழுத்தமாகவும் புதிதாகவும் தெரிந்த காலடியைப் பார்க்கும்பொழுது, அந்த உயிரினம் வெகு தொலைவு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது யாருமே வித்தியாசமான உருவத்தையும் பார்த்ததில்லை, வித்தியாசமான சத்தத்தையும் கேட்டதில்லை என்றனர். அநேகமாக இது பனிமனிதனாகத்தான் இருக்க வேண்டும். இதுவரை அதை நான் நம்பவில்லை. காலடித் தடத்தைப் பார்த்த பிறகு பனிமனிதன் இருக்கலாம் என்று தோன்றுகிறது’’ என்கிறார் ஆண்ட்ரி. இந்தக் கோடையில் மட்டும் இரண்டாவது முறையாகப் பனிமனிதன் காலடித் தடம் இங்கே இருப்பதாகப் புகார் வந்திருக்கிறது என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

காலம் காலமாக காலடியை மட்டும் விட்டுச் செல்லும் பனிமனிதனே, எங்கே ஒளிந்திருக்கிறாய்?

பிரேஸிலைச் சேர்ந்த குளவியின் விஷத்தில் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய தன்மை இருப்பதாக லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பால் பீல்ஸ் தெரிவித்திருக்கிறார்.

‘‘தன்னை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கே குளவிகள் கொடுக்கில் விஷத்தை வைத்திருக்கின்றன. புற்றுநோய் இருக்கும் பகுதிகளில் குளவியின் கொடுக்கை வைத்து விஷத்தைச் செலுத்தினால், புற்றுநோய் செல்கள் வேகமாக அழிந்து போகின்றன. உடலின் பல்வேறு பகுதிகளில் வரும் புற்றுநோய்களுக்குப் பல்வேறு விதங்களில் மருத்துவம் செய்யப்படுகின்றன.

மருத்துகளை எடுத்துக்கொள்வதோடு, குளவியின் விஷத்தையும் செலுத்தினால் எளிதில் புற்றுநோயிலிருந்து மீண்டுவிடலாம். குளவியின் விஷம் நோய் இருக்கும் செல்களில் மட்டுமே வேலையைக் காட்டுகிறது. நோயற்ற செல்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிப்பதில்லை என்பது முக்கியமானது’’ என்கிறார் பால் பீல்ஸ். இன்னும் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு குளவி விஷத்தை புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

புற்றுநோய் அரக்கனிடமிருந்து மனிதர்களை மீட்கும் காலம் வெகு விரைவில் வரவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x