Last Updated : 25 Jul, 2020 07:36 AM

 

Published : 25 Jul 2020 07:36 AM
Last Updated : 25 Jul 2020 07:36 AM

கரோனாவுக்கு எதிரான ‘ஹெர்ட் இம்யூனிட்டி’ மனிதர்களுக்கு உருவாக நீண்டகாலமாகும்: உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி

கரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றல் ஹெர்ட் இம்யூனிட்டி (மந்தைத் தடுப்பாற்றல்) மனிதர்களுக்கு உருவாக நீண்டகாலமாகும். ஆதலால், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விரைவுபடுத்த வேண்டும் அதன் மூலம்தான் மந்தைத் தடுப்பாற்றலை உருவாக்குவதுதான் பாதுகாப்பானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஹெர்ட் இம்யூனிட்டி முறை என்பது மக்கள் தொகையில் பெரும்பாலானோரைத் தொற்று நோய்க்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றுதல்.

அதாவது, ஒரு கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டு குணமடைந்து அதன் மூலம் நோய்த் தடுப்பாற்றல் பெறுதல் அல்லது தடுப்பூசி போடுதல் மூலம் நோய்தத் டுப்பாற்றல் பெறுதலாகும். இதன் மூலம் நோய்த் தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்கு இந்த நோய் பரவுவது தடுக்கப்படும்.

கரோனா வைரஸ் உலகில் பரவத் தொடங்கியதிலிருந்து மந்தைத் தடுப்பாற்றல் குறித்து பரவலாகப் பேசப்பட்டது, அதை பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகள் முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியானது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க காலம் ஆகும் என்பதால், இயற்கையாகவே நோய்த் தடுப்பாற்றல் பெற இந்த முறை கையாள்வதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்ததைக் காண முடிந்தது.

இந்நிலையில் மந்தைத் தடுப்பாற்றல் கரோனாவுக்கு எதிராக மனிதர்கள் பெறுவதற்கு நீண்டகாலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அதன் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் லண்டனிலிருந்து காணொலி வாயிலாக நேற்று பேட்டி அளித்தார்.

விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

அப்போது அவர் கூறியதாவது:

''கரோனா வைரஸுக்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டி எனச் சொல்லப்படும் மந்தைத் தடுப்பாற்றலை மனிதர்கள் இயற்கையாகப் பெற நீண்டகாலமாகும். மிகப்பெரியஅளவில் மனிதர்களுக்கு நோய்த் தடுப்பாற்றல் கிடைத்தால் மட்டுமே ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியம்.

உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி 50 முதல் 60 சதவீத மக்களுக்கு நோய்த் தடுப்பாற்றல் கிடைத்தால்தான் ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியம். அந்த வகையில் இயற்கையாக அதைப் பெறுவதற்கு இன்னும் நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்குள்ள மக்களில் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றுள்ளார்கள். இன்னும் சில நாடுகளில் மிக அதிகபட்சமாக 20 சதவீதம் மக்கள் மட்டுமே நோய்த் தடுப்பாற்றலைப் பெற்றுள்ளார்கள்.

இயற்கையாக நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதற்கு நாடு முழுவதும் நோய்த்தொற்று, அலை அலையாகப் பரவ வேண்டும், அதன்மூலம் தடுப்பாற்றல் கிடைக்கும். இயற்கையாக மனிதர்கள் ஹெர்ட் இம்யூனிட்டி பெற வேண்டுமென்றால் 70 முதல் 80 சதவீதம் வரை நோய்த் தடுப்பாற்றலைப் பெற வேண்டும் என்றுகூட சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், உலக சுகாதார அமைப்பின்படி, தடுப்பூசி மூலமே மக்கள் நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதுதான் பாதுகாப்பானது. மக்கள் நோயால் பாதிக்கப்படாமல் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும்.

ஆதலால், இயற்கையாக நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதைவிட, தடுப்பூசி மூலம் பெறுவதுதான் சிறந்த வழி. இயற்கையாக நோய்த் தடுப்பாற்றலைப் பெற அதிகமானோருக்கு நோய்த்தொற்றைப் பரவச் செய்ய வேண்டும், அதனால் ஆபத்துகளும், உயிரிழப்புகளும் நேரலாம்.

அதேசமயம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்பது இறப்பு வீதத்தைக் குறைக்க உதவும்.

எங்களின் கணக்கின்படி கரோனா தடுப்பூசி மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நிறுவனங்களின் தடுப்பூசி தயாராகிவிடும். ஆனால், உலகில் கோடிக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதால், அனைவருக்கும் கிடைக்க சிறிது காலமாகும். மக்கள் நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்கத் தயாராக வேண்டும்.

உலக அளவில் 200 நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்து ஆய்வில் பல்வேறு கட்டங்களில் இருக்கிறார்கள். கரோனா வைரஸின் பாதிப்பின் தீவிரத்தை அறிந்து மிக வேகமாகத் தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.

பொதுவாகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி என்பது நீண்டகால நடைமுறை, ஒவ்வொரு கட்டமாகத்தான் செல்ல முடியும். சூழல் கருதி தற்போது அனைத்தும் விரைவுபடுத்தப்படுகிறது''.

இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x