

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,209 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,70,400 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 1,209 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 54 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் இதுவரை 2,70,400 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,763 பேர் கரோனாவுக்குப் பலியாகினர்.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் கரோனா தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிந்து மாகாணத்தில் 1,15,883 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் 91,423 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1,316 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், 2,19,783 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, அதிபர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.
இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.