Published : 24 Jul 2020 03:23 PM
Last Updated : 24 Jul 2020 03:23 PM

ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்குப் பிறகு  ‘பெப்சிட்’, அல்சர் மருந்தை கரோனாவுக்கு ஆய்வு செய்ய நிதியளித்து படுதோல்வி கண்ட ட்ரம்ப் நிர்வாகம்

நெஞ்செரிச்சல், அசிடிட்டி, அல்சர் போன்றவற்றுக்கு அமெரிக்காவில் மருத்துவர்கள் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே கவுண்ட்டரில் விற்கப்படும் மருந்து பெப்சிட் ஆகும்.

இந்த பெப்சிட் என்ற மருந்தின் முக்கிய உட்பொருள் ஃபேமோடிடின் (famotidine)ஆகும். இந்த ஃபேமோடிடின் கரோனாவைக் குணப்படுத்துமா என்ற ஆய்வுக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் எந்த ஒரு மருத்துவ ஆதாரம், கரோனாவுக்கும் இதற்குமான தொடர்பு பற்றிய எந்த ஒரு மருத்துவச் சுவடும் இல்லாமல் 21 மில்லியன் டாலர்கள் நிதியளித்து ஆய்வு மேற்கொள்ளச் சொன்னதாக அமெரிக்காவில் சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

21 மில்லியன் டாலர்கள் செலவு செய்து எந்த ஒருஆதாரமும் இல்லாத ஒரு மருந்தை கரோனாவுக்காகச் சோதனை செய்து அதில் படுதோல்வியடைந்ததாக அங்கு விசில் ப்ளோயர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் அரசு ஆவணங்கள் அடிப்படையிலும் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் ட்ரம்ப் நிர்வாகத்தின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது.

அல்சருக்கு எதிரான மருந்துக்கும் கரோனாவுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இதில் ஆய்வு செய்ய பெடரல் ரிசர்வின் பணம் செலவிடப்பட்டது? என்ற கேள்விகளோடு, அங்கு பல நிபுணர்களுக்கும் இது சிரிப்பை வரவழைத்துள்ளது.

பெப்சிட் என்ற அல்சர் மருந்தில் உள்ள ஃபேமோடிடினை டெஸ்ட் செய்வதற்காக நியூயார்க்கில் உள்ள நார்த்வெல் ஹெல்த் என்ற மருத்துவ நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட்19 நோயாளிகள் அவ்வளவாக இல்லாததால் இந்த மருத்துவ சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது.

புளோரிடாவில் உள்ள அல்கெம் மருந்து நிறுவனத்துடன் இணைந்து நார்த்வெல் இந்த ஒப்பந்தத்தைப் பெற்றது.

இந்த நகைப்புக்குரிய ஆய்வும் அதற்குச் செய்த செலவும் அங்கு ட்ரம்ப் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது, எப்படி அறிவியல் ஆய்வையெல்லாம் திரிக்க முடியும் என்ற கேள்வியும எழுந்துள்ளது. அறிவியல் ஆதாரமில்லாமல் இது போன்ற ஆய்வுகளுக்காகச் செலவு செய்து மக்கள் பணம் சில முதலாளிகள் கையில் செல்வதற்கு ட்ரம்ப் அனுமதித்ததாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இதை அம்பலப்படுத்திய ரிக் பிரைட் இது தொடர்பாக புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

கிளீவ்லேண்ட் கிளினிக் இருதய நோய் நிபுணர் ஸ்டீவன் நிசன் ஏபி செய்தி ஏஜென்சிக்குக் கூறும்போது, “ஃபேமோடிடின் கரோனாவை தடுக்குமோ, குணப்படுத்துமோ தெரியாமல் அதனை ஆய்வு செய்வதற்கான ஆதாரமாகக் காட்டப்பட்டது மிகவும் பலவீனமானது. இது போன்ற பயனற்ற ஆய்வுகள் காலவிரயம், பண விரயம் ஆகும்” என்றார்.

ஆனால் ஆய்வு ஒப்பந்தம் பெற்ற நார்த்வெல் ஹெல்த் செய்தித் தொடர்பாளர் மேத்யூ லிபாஸி, “ஃபேமோடிடின் சோதனையில் ஒரு ஆதாரபூர்வமான அறிவியல் இருப்பதாகவே நம்புகிறோம்” என்றார்.

அல்கெம் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராபர்ட் மலோன் என்பவர் ஒரு வைராலஜிஸ்ட். இவர் தலைமையில் இருக்கும் போதுதான் அல்கெமுக்கு இந்த பெப்சிட் ஆய்வு ஒப்பந்தம் கிடைத்தது. இவர்தான் பெப்சிட் கரோனாவுக்கு எதிராக வேலை செய்யும் என்பதைக் கிளப்பி விட்டவர் என்று கூறப்படுகிறது.

அதாவது டாக்டர் ராபர்ட் மலோன் கூறும்போது தனக்கு ஜனவரி 4ம் தேதியன்று சீனாவில் பணியாற்றும் சக அமெரிக்க மருத்துவர் மைக்கேல் கேலஹன் தன்னிடம் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது என்றும் உடனே தான் வைரஸின் மரபணு சமிக்ஞைகளை கணினி மாதிரியில் ஆராய்ந்து ஏற்கெனவே உள்ள மருந்துகளில் எது இதனை தடுக்கும் என்று ஆய்வு செய்த போது ஃபேமோடிடின் நல்ல அறிகுறி இருப்பதாகவும் தனக்கு தெரிந்தது என்றார்.

வூஹானில் பணியாற்றும் டாக்டர் கேலஹனும் இதனை வழிமொழிந்தார். ஆனால் பல மருத்துவ நிபுணர்களாலும் இது ஒரு பெரிய ஜோக் என்பதாகவே பார்த்துள்ளனர். ஆனால் மருத்துவ நிபுணர்களின் கவலையெல்லாம் ஓரங்கட்டப்பட்டு டாக்டர் கேட்லெக் என்ற ட்ரம்ப் நிர்வாகத்துக்கு நெருக்கமான மருத்துவர் பெப்சிட் சோதனையை அவசரப்படுத்தியுள்ளதாக இதனை அம்பலப்படுத்திய ரிக் பிரைட் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காலமாக இல்லையெனில் இந்த பெப்சிட் மருத்துவ சோதனை திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவே வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆட்டோ இம்யூன் நோயான முடக்கு வாதத்திற்கு வாழ்நாள் முழுதும் எடுத்துக் கொள்ளும் ஹைக்ட்ராக்சிகுளோரோகுய்னை இப்படித்தான் ட்ரம்ப் பரிந்துரைத்து அது பிற்பாடு பிசுபிசுத்துப் போனது, அதே போல் இந்த அல்சர் மருந்தான பெப்சிட் ஆய்வும் பிசுபிசுத்துப் போயுள்ளதோடு ட்ரம்ப் நிர்வாகத்துக்கு கடும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

(-ஏஜென்சி தகவல்களுடன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x