Published : 24 Jul 2020 09:22 AM
Last Updated : 24 Jul 2020 09:22 AM

தூதரகங்கள் மூடல் விவகாரம்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகி வரும் சீனா

சீன தூதரகங்களை மூட அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் உரிய பதிலடி கொடுக்க தாங்களும் தயாராகி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இந்த நடவடிக்கையினால் உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் சீனாவும் பதிலடி கொடுப்பதை தவிர்க்க முடியாது என்று சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

ஹூஸ்டன் தூதரகத்தை மூட அமெரிக்கா 72 மணி நேரம் கெடு விதித்திருந்தது, ’அமெரிக்க அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கவும் அமெரிக்க தனிப்பட்ட ரகசியங்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை என்று அமெரிக்கா தெரிவித்ததை சீன வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் சீன தூதரக அலுவலகத்தில் சீன விஞ்ஞானி டாங் ஷுவான் பதுங்கியுள்ளதாகவும் அவருக்கும் சீன ராணுவத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் அமெரிக்கா திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விஞ்ஞானி தலைமறைவாக இருப்பதாகவும் அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.

இவர் அமெரிக்க தொழில், விஞ்ஞான ரகசியங்களை,கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி குறித்த ரகசியங்களை வேவு பார்க்கும் நபர் என்று ஒரு சில தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் ஹூஸ்டன் சீன தூதரக வளாகத்தை அமெரிக்கா மூடியது.

தற்போது இதற்குப் பதிலடியாக வூஹானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடப்போவதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனால் இதுகூட போதாதென்று ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஆட்களை பெரிய அளவில் வெளியே அனுப்பவும் சீனா திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு வலி கொடுத்து பாடம் புகட்ட முடியும் என்று சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் எடிட்டர் ஹூ ஷீஜின் எழுதியுள்ளார்.

சீன தூதரகங்களை மூட அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ‘ஹூஸ்டன் தூதரகம மட்டுமல்ல, தூதரகங்களை தனது வேவு பார்க்கும் நடவடிக்கைகளுக்காகவும் சந்தேகம் தரும் விதமான, எதிர்கால சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் சீனா பயன்படுத்துவது தொடர்ந்து நடந்து வருவதே அமெரிக்க நடவடிக்கைக்குக் காரணம்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x