

ஈரானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,84,034 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில், ''ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 221 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கரோனா வைரஸால் 15,074 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,621 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,84,034 ஆக அதிகரித்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3.5 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளனர் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.