

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரைக் கொன்ற தலிபான்களைச் சுட்டுக் கொன்ற சிறுமிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் ஆப்கானிஸ்தானின் கர் மாகாணத்தில் நடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் கர் மாகாணத்தில் உள்ள கிர்வா கிராமத்தில் ஆப்கன் அரசுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பெற்றோர்களைக் கொன்ற தலிபான்களுக்கு எதிராக ஏகே 47 துப்பாக்கியைக் கையில் எடுத்த சிறுமி தலிபான்கள் இருவரைச் சுட்டுக் கொன்றார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், இந்தச் சம்பவத்தை தலிபான்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில், தலிபான்களால் சுட்டுக் கொன்ற சிறுமிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பெயர் குறிப்பிடப்படாத அச்சிறுமியும், அவரது தம்பியும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.