Published : 12 Sep 2015 08:53 am

Updated : 12 Sep 2015 08:53 am

 

Published : 12 Sep 2015 08:53 AM
Last Updated : 12 Sep 2015 08:53 AM

உலக மசாலா: பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஓவியம்!

உலகப் புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கா, நெதர்லாந்தில் உள்ள ஜுன்டெர்ட் நகரில் பிறந்தார். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் இங்கே பூக்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வான் கா இறந்து 125வது ஆண்டு என்பதால், அவரைச் சிறப்பிக்கும் விதத்தில் திருவிழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள். இதில் 50 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர். வான் கா உருவமும் அவர் வரைந்த ஓவியங்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வோர் அலங்காரமும் 10 மீட்டர் உயரமும் 20 மீட்டர் அகலமும் கொண்டது. 50 வகையைச் சேர்ந்த 6 லட்சம் டெய்லியா பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகள் பார்வையாளர்களைக் கொள்ளைகொண்டன.

திறமைக்கு மரியாதை!


அமெரிக்க விஞ்ஞானி டேவ் விட்லாக், 12 ஆண்டுகளாகக் குளிக்காமல் இருப்பதாகச் சொல்கிறார். குளிப்பதற்குப் பதிலாக, அவரே கண்டுபிடித்த நன்மை செய்யும் பாக்டீரியா ஸ்ப்ரேயைப் பயன்படுத்தி வருகிறார். ‘‘தினமும் குளிக்க வேண்டும் என்று இதுவரை எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லை. தினமும் சோப், ஷாம்பூ போட்டுக் குளிக்கும்போது உடலில் இயற்கையாக இருக்கும் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களைச் சிதைத்துவிடுகின்றன. நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் தோலில் இருந்து சுரக்கும் வியர்வை, எண்ணெய் போன்றவற்றைத் தின்று, நம் உடலைச் சுத்தப்படுத்தி விடுகின்றன.

யூரியாவையும் அமோனியாவையும் வியர்வையில் இருந்து எடுத்துக்கொண்டு, நைட்ரிக் ஆக்ஸைடை திருப்பித் தருகின்றன நன்மை செய்யும் பாக்டீரியாக்கள். நைட்ரிக் ஆக்ஸைட் ரத்த நாளங்களுக்குள் சென்று ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது’’ என்கிறார் டேவ் விட்லாக். மதர் டர்ட் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் ஸ்ப்ரே, தண்ணீரைப் போன்று இருக்கிறது. தினமும் குளிக்காமல் இருவேளை இந்த ஸ்ப்ரேயை உடல் முழுவதும் போட்டுக்கொள்ள வேண்டும். மதர் டர்ட் ஸ்ப்ரேயின் விலை 6,600 ரூபாய்.

தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரிக்கும் இடங்களில் உங்க கண்டுபிடிப்பு பயன்படலாம்!

நாசாவைச் சேர்ந்த பொறியியலாளர் தாமஸ் சைவைட், இறந்தவர்களின் அஸ்தியை சந்திரனில் கொண்டு வைப்பதற்கு ‘எலிசியம்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். ‘‘எல்லோருக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. சொர்க்கத்துக்கு என்னால் வழிகாட்ட இயலாது என்பதால், சந்திரனுக்காவது அஸ்தியைக் கொண்டு செல்லலாம் என்று இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறேன். சந்திரனை விரும்பாதவர்களே உலகில் இல்லை.

அந்தச் சந்திரனில் சாம்பலைத் தூவுவது மூலம் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற இயலும் என்று நினைக்கிறேன். அதற்காக விண்வெளி நிறுவனமான அஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜியுடன் இணைந்து இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறேன்’’ என்கிறார் தாமஸ். 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அஸ்தியைப் பெற்றுக்கொள்ளும் பணி ஆரம்பித்திருக்கிறது. அஸ்திகள் சேகரிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு சந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கின்றன.

மக்களின் விருப்பத்தை இப்படி எல்லாமா பயன்படுத்துறது தாமஸ்?

சீனாவின் சோங்க்விங் பகுதியில் வசிக்கிறார் யுவான் டைபிங். 30 வயது இளைஞர், 80 வயது முதியவர் போலத் தோற்றம் அளிக்கிறார். மரபணுக் குறைபாடால் இந்த முதுமை ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். யுவான் பார்க்காத வைத்தியம் இல்லை. ஆனால் எந்த மருந்துக்கும் இவரது நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் முதுமை அதிகரித்தபடியே இருக்கிறது. 20 வயது வரை இயல்பான வாழ்க்கை வந்து வந்தார் யுவான். திடீரென்று அவரது கைகளிலும் கால்களிலும் சுருக்கங்கள் விழ ஆரம்பித்தன.

பிறகு முகத்திலும் முதுமை வர ஆரம்பித்துவிட்டது. இந்த முதுமையால் அவரது அடையாள அட்டையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. யுவானும் அவர் மனைவியும் வெளியே சென்றால், முதியவரை ஏன் திருமணம் செய்துகொண்டாய் என்று எல்லோரும் கேட்கிறார்கள். யுவானின் தம்பிக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தாமதிக்காமல் மருத்துவரை நாடியதால், அவரது முதுமை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதே ஊரில் மேலும் இருவர் முதுமை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஐயோ… பாவமே…
உலக மசாலாபூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஓவியம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x