செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக விண்கலம்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா 

சீனாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட விண்கலம்: படம் உதவி ட்விட்டர்
சீனாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட விண்கலம்: படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read

சீனாவின் ஹெய்னான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக விண்கலத்தை சீனா வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தியது.

செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கெனவே இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் விண்கலங்களை செலுத்திய நிலையில் அந்த வரிசையில் சீனாவும் சேர்ந்துள்ளது.

இதில் ஆசியாவிலேயே முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாகச் செலுத்திய பெருமை இந்தியாவையே சேரும். இந்தியா தனது முதல்முயற்சியிலேயே மங்கல்யான் விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்தியது. 2014-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.

சீனா தனது 2-வது முயற்சியில்தான் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ரஷ்யாவின் ராக்கெட்டிலிருந்து யிங்ஹுவோ-1 என்ற பெயரில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியது. ஆனால், ஆனால் செலுத்தப்பட்ட சில மணிநேரத்தில் அந்த விண்கலம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் 2-வது முயற்சியாக செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக சீனா இன்று லாங்மார்ச் -5 எனும் ராக்கெட் மூலம் விண்ணில் விண்கலத்தை செலுத்தியுள்ளது. ஹெய்நன் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளித்தளத்திலிருந்து இன்று விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதாக சீனாவின் தேசிய விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விண்கலத்துக்கு தியான்வென்-1 அல்லது "சொர்க்கத்தில் உண்மைக்கான தேடல்" என்று பெயரிட்டு சீனா அனுப்பியுள்ளது. இந்த விண்கலத்தின் முக்கிய நோக்கம், செவ்வாய்கிரகத்தைப் பற்றிய முழுமையாக அறிந்து கொள்ளுதல், செவ்வாய்கிரகத்தின் நிலம், மண், சுற்றுச்சூழல், நீர், வளங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

சீனா அனுப்பியுள்ள இந்த தியான்வென்-1 விண்கலம் ஏறக்குறைய 7 மாதங்கள் பயணித்து செவ்வாய்கிரகத்தை சென்றடையும். பூமியிலிருந்து ஏறக்குறைய 4 கோடி கி.மீ தொலைவுக்கு இந்த விண்கலம் பயணிக்க உள்ளது. இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்கிரகத்தில் விண்கலம் லேண்டர் மூலம் இறங்கியவுடன் விண்கலத்தில் உள்ள ரோவர் எந்திரம் செயல்படத்தொடங்கும். 6 சக்கரங்களைக் கொண்டதாகவும், 4 சோலார் பேனல்களையும், 6 அறிவியல் தொடர்பான கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோவர் 3 மாதங்கள் செவ்வாய்கிரகத்தில் இருந்து ஆய்வு செய்யும் என்று சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in