

நோபல் பரிசு பெற்றவர்களுக்கும், முக்கிய விஐபிக்களுக்கும் வழங்கப்படும் ஆடம்பரமான பாரம்பரிய நோபல் விருந்து கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 64 ஆண்டுகளில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விருந்து வழக்கமாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் நடக்கும். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு அந்த வார இறுதியில் விருந்து அளிக்கப்படுவதால் நோபல் வீக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விருந்து பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இயற்பியல், வேதியியல் ஆகியவற்றுக்காக நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 5 பிரிவுகளுக்கான நோபல் பரிசும், நார்வே தலைநகர் ஓஸ்ஹோவில் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படும்.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபின் ஸ்டாக்ஹோம் நகரில் ஸ்வீடன் அரச குடும்பத்தினர், நோபல் பரிசு வென்றவர்கள், உலகம் முழுவதும் உள்ள முக்கிய விஐபிக்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பான, ஆடம்பர விருந்து அளிப்பார்கள். அந்த விருந்துதான் நோபல் வீக் என்று அழைக்கப்படும்.
கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருவதால், இந்த ஆண்டு அந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நோபல் அறக்கட்டளையின் இயக்குநர் லார்ஸ் ஹெய்கின்ஸ்டன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நோபல் வீக் வழக்கம்போல் நடைபெறாது. இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டு. ஒவ்வொருவரும் தியாகம் செய்து, புதிய சூழலுக்கு நம்மை உட்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
நோபல் பரிசு பெறுவோர் அனைவரும் இந்த ஆண்டு வித்தியாசமான முறையில் கவுரவிக்கப்படுவார்கள். அவர்களின் சொந்த நாட்டிலேயே அல்லது தூதரகங்களிலேயே நோபல் பரிசு வழங்கப்படலாம்.
நோபல் வீக் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் கூடுவது, சர்வதேச அளவில் பயணம் செய்வது என்பது சாத்தியமில்லாத சூழலில் இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசு அறிவிப்பு அக்டோபர் 5-ம் முதல் 12-ம் தேதிக்கிடையே அறிவிக்கப்படும்”.
இவ்வாறு லார்ஸ் ஹெய்கின்ஸ்டன் தெரிவித்தார்.
கடைசியாக கடந்த 1956-ம் ஆண்டு ஹங்கேரி புரட்சி காரணமாக சோவியத் தூதரை அழைப்பதைத் தவிர்ப்பதற்காக நோபல் விருந்து ரத்து செய்யப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட உள்ளது. கடந்த 1907, 1924-ம் ஆண்டுகளில் முதலாம், 2-ம் உலகப்போரின்போதும் நோபல் வீக் விருந்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.