

நேபாளத்தில் 4 மாதங்களுக்குப் பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “நேபாளத்தில் கடந்த 4 மாதங்களாக இருந்த ஊரடங்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு புதன்கிழமை இரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கில் தளர்வு கொண்டு வந்தாலும், திரையரங்குகள், பள்ளிகள் தற்போது திறக்கப்படாது. மேலும், மக்கள் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி முதல் சர்வதேச மற்றும் உள்ளூர் விமானப் போக்குவரத்து செயல்படும் என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்திற்கு வருகை தருபவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று நேபாளம் அரசு கூறியுள்ளது.
நேபாளத்தில் இதுவரை 17,994 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் பலியாகி உள்ளனர்.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென்கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.