Last Updated : 22 Jul, 2020 09:09 AM

 

Published : 22 Jul 2020 09:09 AM
Last Updated : 22 Jul 2020 09:09 AM

அமெரிக்காவுக்கு அடுத்து கரோனா பரிசோதனையை அதிகமாகச் செய்த நாடு இந்தியாதான்: ட்ரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடி: கோப்புப் படம்.

வாஷிங்டன்

உலக அளவில் கரோனா பரிசோதனையை அதிகமாகச் செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது வரவேற்கக்கூடியது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், அமெரிக்காவில்தான் மோசமான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அந்நாட்டில் கரோனாவால் 38 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.1.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் கரோனா வைரஸ் பரவல் அந்நாட்டில் குறைந்தபாடில்லை. பல மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரிழந்த ஒவ்வொருவரின் உயிரும் விலைமதிக்க முடியாதது, அதற்காக வருந்துகிறேன். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்து, அதை வெல்ல வேண்டும். கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா நல்ல முன்னேற்றத்தில் இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் என்னுடைய நிர்வாகத்தால் முடியவில்லை. ஆனால், இந்த வைரஸ் குறித்து அதிகமாக அறிந்துகொண்டோம். இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் யார் என்பதை அறிந்துகொண்டு அவர்களைப் பாதுகாக்கிறோம்.

நாம் எதிர்பார்க்கும் காலத்தைவிட முன்கூட்டியே கரோனா தடுப்பு மருந்து புழக்கத்துக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

உலக அளவில் அதிகமான கரோனா பரிசோதனை செய்த நாடுகளில் அமெரிக்காதான் முன்னிலையில் இருக்கிறது. இதுவரை 5 கோடி பரிசோதனைகள் செய்திருக்கிறோம். அதற்கு அடுத்து அதிகமான பரிசோதனைகளைச் செய்து 2-வது இடத்தில் இந்தியா இருப்பது வரவேற்கக்கூடியது. இந்தியா இதுவரை 1.50 கோடி பரிசோதனைகள் செய்துள்ளது. இன்னும் நாம் அதிகமான பரிசோதனைகள் செய்ய வேண் டியுள்ளது.

சீனாவிலிருந்து உருவான சீன வைரஸ் மிகவும் ஆபத்தானது. மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது. மோசமான நோயை உருவாக்கிய சீனாவை நாம் தப்பிக்க விடக்கூடாது. உலகம் முழுவதையும் சீனா நோயால் ஆட்படுத்தியுள்ளது. உலகமே சீனாவால் துன்பப்படுகிறது.

ஆனால், இந்த நேரத்தில்கூட அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளது.

அமெரிக்காவில் சில மாநிலங்கள் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன. சில மாநிலங்கள் போராடுகின்றன. எதிர்பார்த்த அளவுக்கு அவர்களால் செயல்பட முடியவில்லை. கரோனா வைரஸை நாம் எதிர்த்து நல்ல நிலைக்கு நாம் வருவதற்கு முன், துரதிர்ஷ்டவசமாக அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லலாம்''.

இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x