பிரேசிலில் கரோனா பலி 80,000-ஐக் கடந்தது

பிரேசிலில் கரோனா பலி 80,000-ஐக் கடந்தது
Updated on
1 min read

பிரேசிலில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 80,000-ஐக் கடந்துள்ளது.

“பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 632 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 80,264 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 21,22,577 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று பிரேசில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கரோனா பரவலின் மையமாக பிரேசில் விளங்குவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in