

கேரள மாநிலம் காயம்குளத்தைச் சேர்ந்தவர் பிஜு ரவீந்திரன் (41), குரேஷியாவில் ஒரேநாளில் தன் உயிரையும் பொருட்படுத்தாது செய்த தீரச் செயலுக்காக தேசிய ஹீரோவானார்.
குரேஷியாவின் பெலோவர் நகரில் ஜூலை 10ம் தேதி உள்நாட்டு நேரம் அதிகாலை 2 மணி, இந்திய நேரம் 5 மணி இருக்கும். ஒரு குடியிருப்பில் பிஜுவும் அவரது மலையாள நண்பர்களும் தங்கியிருந்த போது, அந்த குடியிருப்பில் தீப்பிடித்தது. அப்போது ஒரு பெண்ணும் அவரது 2 குழந்தைகளும் அந்த 3 மாடி குடியிருப்பில் சிக்கித் தவித்தனர். தீயிலிருந்து வெளியே வர முடியாமல் அலறியுள்ளனர்.
இது குறித்து பிஜு ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, நாங்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது பெரிய சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தோம். வெளியே பெரிய நெருப்புப் பிழம்பு. நான் உடனே வெளியே ஒடி வந்தேன். அதற்குள் டாப் தளத்தை தீ முழுதும் பற்றியது. அங்கிருந்து ஒரு பெண்ணும் குழந்தைகளும் அலறும் சப்தம் எனக்குக் கேட்டது.
உள்ளூர் மக்கள் திரண்டனர், ஆனால் அனைவரும் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தனர். அப்போது இன்னொரு கட்டிடத்திலிருந்து ஏணியைக் கொண்டு வந்து தீக்கட்டிடத்தின் டாப் ஃப்ளோரில் ஏறினேன். ஆனால் தீ சுழன்றடித்ததால் பால்கனி பக்கம் செல்ல முடியவில்லை.
ஆனால் எப்படியோ வெண்ட்டிலேட்டரைக் கண்டுபிடித்து அதன் கண்ணாடி அமைப்பை உடைத்தேன். அப்போது ஹெலெனா ரூபில் என்ற அந்தப் பெண் தன் 3 மற்றும் 5 வயது குழந்தைகளை வெண்ட்டிலேட்டர் வழியாக என்னிடம் கொடுத்தார். ஆனால் அவரால் வெண்ட்டிலேட்டரை எட்ட முடியவில்லை, நான் உடனே சிறிய ஏணியை அவரிடம் கொடுத்தேன். அவர் மெதுவே எட்டி அதன் வழியாக வந்த போது பெரிய ஏணியின் உதவியுடன் பாதுகாப்பாக இறங்கச் செய்தேன்.
என் நண்பர்கள் வர்கீஸ், ஜோபி எனக்கு உதவி புரிந்தார்கள். இவை அனைத்தும் அரைமணி நேரத்தில் நடந்தது. பிறகுதான் தீயணைப்ப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர், என்றார் பிஜு.
அங்கு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனத்தில் பிஜு வெல்டராகப் பணியாற்றி வருகிறார். இவரது தீரத்தை உள்ளூர் அரசு அங்கீகரித்துப் பாராட்டியுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நிறைய குரேஷிய நிறுவனங்கள் இவரை வேலைக்கு அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிஜுவின் மனைவி, குழந்தை கேரளாவில் கிராமத்தில் உள்ளனர்.