

கலிபோர்னியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,800 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள், “கடந்த 24 மணி நேரத்தில் கலிபோர்னியாவில் 11,800 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,99,898 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒருவாரமாக்வே கலிபோர்னியாவில் 10,000 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
புளோரிடாவிலும் கடந்த ஒரு வாரமாக 10,000 வரை கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
உலக அளவில் கரோனா தொற்றில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 39,61,556 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,43,835 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 43 மாகாணங்களில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது. இதனால் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.