

முகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் வரும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸில் ஊரடங்கு தளர்த்தப்பட்டத்திலிருந்து கரோனா பாதிப்பு, இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா மருத்துவப் பரிசோதனைகளை அதிகப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதனை பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை செயலாளர் பிரான்ஸிகோ உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போது கரோனா பரிசோதனைகள் 20 ஆயிரம் என்ற அளவில் செய்யப்படுகின்றன. இந்த அளவை 40 ஆயிரம் வரையில் உயர்த்த முடிவு செய்துள்ளோம். பிலிப்பைன்ஸில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் இதுவரை 68,898 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,835 பேர் பலியாகி உள்ளனர்.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.