Published : 20 Jul 2020 08:32 PM
Last Updated : 20 Jul 2020 08:32 PM

ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பூசி; முதற்கட்ட சோதனை வெற்றி: நோய் எதிர்ப்பை தூண்டுகிறது

கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பலநாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்று பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்புப் மருந்து மனித உடலுக்கு பாதுகாப்புடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டன் அரசின் உதவியுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்து பரிசோதித்து வந்தது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் 3ம் கட்ட பரிசோதனை சமீபத்தில் தொடங்கியது.

இந்த தடுப்பூசியில் இரட்டைப் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாகவும், இந்த ஊசிமருந்தைச் செலுத்தும் போது , உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆன்ட்டி-பாடிக்களை அதிகரிக்கச் செய்ய தூண்டுவதோடு மனித உடலில் வைரஸை உருவாக்கும் செல்களை அழிக்கும் வல்லமை கொண்ட ‘கில்லர் டி-செல்களையும் உருவாக்குகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இதன் முதற்கட்ட பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ சுமார் 1,077 பேருக்கு இந்த தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டதில், அவர்கள் ரத்தத்தில் இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன் . கரோனா வைரஸுடன் போரிடும் வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்பு மருந்தில் உள்ள டி செல்ஸ் மற்றும் வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி கரோனா வைரஸை அழிக்க உதவுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் சாரா கில்பர்ட் கூறும்போது, ‘கரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த எங்கள் தடுப்பூசி உதவுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் நிறைய வேலைகள் உள்ளன.ஆனால் இந்த ஆரம்ப முடிவுகள் நமக்கு நம்பகத்தன்மையை அளித்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

ChAdOx1 nCoV-19 என்று இந்தத் தடுப்பூசிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை 100 மில்லியன் என்ற அளவில் வாங்குவதற்கு பிரிட்டன் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த தடுப்பூசியினால் பெரிய அளவில் மனித உடலில் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x