

சீனாவில் வெள்ளம் காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு வெள்ளப் பெருக்கைத் தடுக்க அணை ஒன்று வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “மத்திய சீனாவில் உள்ள அப்ஹு மாகாணத்தில் உள்ள சுஹி ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுவதால் உயிரிழப்பைத் தவிர்க்கும் பொருட்டு ஆற்றின் அணை வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கனமழை காரணமாக 15 கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 10,000க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளப் பெருக்கால் 150க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் சில பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகள், விவசாய நிலங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாயின.
இந்நிலையில் தொடர்ந்து கனமழைக்கான சூழல் நிலவி வருகிற நிலையில் ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சி மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள புயலால் இதுவரையில் 140 பேர் காணாமல் போயுள்ளனர்.
1998 ஆம் ஆண்டு சீனாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 2,000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 30 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டன. அப்போதும் வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் பொருட்டும், உயிரிழப்பைத் தடுப்பதற்காகவும் சீனாவில் அணைகள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன.