

பாகிஸ்தானில் கரோனா பரவல் காரணமாக பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குதல் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது
இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், “ பாகிஸ்தானில் கராச்சி, கவுட்டா, பைசிலாபாத் போன்ற மாவட்டங்களில் சுமார் 8 லட்ச குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 59 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக சுமார் 82 நாடுகளில் மே மாதத்தில் யுனிசெஃப் நடத்திய கருத்துக்கணிப்பின்படி குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் நிகழ்வுகள் கரோனா வைரஸ் காரணமாக கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது என்று ஐக்கிய நாடுகள் சபை சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக உலகின் பல இடங்களில் ஊரடங்கு நீடிப்பதால் சுகாதாரப் பணியாளர்கள் மருந்துகளைக் கொண்டு செல்வதில் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.
மேலும், வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகளை குழந்தைகள் இழப்பதால் ஏற்படும் மரணங்கள் கரோனா வைரஸினால் ஏற்படும் மரணங்களைவிட அதிகமாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன.
இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.