வரலாறு படைத்த ஐக்கிய அரபு அமீரகம்: ‘நம்பிக்கை’ விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி சாதனை

ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தகாட்சி : படம் உதவி | ட்விட்டர்.
ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தகாட்சி : படம் உதவி | ட்விட்டர்.
Updated on
2 min read

வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு 'நம்பிக்கை' விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்துள்ளது. ஜப்பான் நாட்டிலிருந்து இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

“அல் அமால்” என்று அரபு மொழியில் பெயரிடப்பட்ட(நம்பிக்கை) இந்த விண்கலம், 1.3 டன் எடை கொண்டதாகும். இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

நெருப்புப் பிழம்புகளைக் கக்கிக்கொண்டு சீறிப் பாய்ந்த ராக்கெட்டிலிருந்து ஒருமணிநேரத்தில் விண்கலம் தனியாகப் பிரிந்து, அதனுள் இணைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்கள் மூலம் சக்தியைப் பெற்று சிக்னல்களைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது.

இந்தத் தகவலை ராக்கெட்டை வடிவமைத்து அனுப்பிய மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் ஏவுதள நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

புதிய வரலாறு

ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு முன் 2009, 2013-ம் ஆண்டு தென் கொரியாவுடன் இணைந்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பியிருந்தாலும், 2014-ம் ஆண்டுதான் சொந்தமாக விண்வெளி மையத்தை அமைத்தது. ஆனால், அடுத்த 6 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு சிறிய நாடு, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்புவது இதுதான் முதல் முறையாகும்.

துபாயில் உள்ள அல் கவானீஜ் விண்வெளிக் கட்டுப்பாட்டு அறைக்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய விண்கலம் தொடர்ந்து சிக்னல்களை அனுப்பி வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை செவ்வாய் கிரகத்தில் ரோபாவை இறக்கி அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் மட்டுமே ஆய்வு செய்துள்ளன.

201 நாட்கள் பயணம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நம்பிக்கை விண்கலம் 49 கோடியே 50 லட்சம் கி.மீ. விண்வெளியில் பயணித்து, 201 நாட்கள் பயணம் செய்து, 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தைச் சென்று சேரும். ஐக்கிய அரபு அமீரகம் உருவாகி 50-வது ஆண்டு என்பதால், அந்த ஆண்டு நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடையும்.

செவ்வாய் கிரகத்தின் ஆண்டுப்படி 687 நாட்கள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் நம்பிக்கை விண்கலம், அந்தக் கிரகத்தின் காலநிலை, பருவநிலை, பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் எவ்வாறு வேறுபட்டுள்ளது, செவ்வாய் கிரகத்தில் ஏன் தூசி நிறைந்துள்ளது, சிவப்பு நிறமாகக் காட்சி தர என்ன காரணம், அங்குள்ள தன்மைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

6 ஆண்டு, 20 கோடி டாலர்

இந்த நம்பிக்கை விண்கலத் திட்டத்துக்காக ஐக்கிய அரபு அமீரகம் அரசு 20 கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஏறக்குறைய 6 ஆண்டுகள் தீவிர முயற்சியின் பயனாக 135 பொறியாளர்களின் கடின உழைப்பால் இந்த விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

வழக்கமாக செவ்வாய் கிரகத்துக்கான விண்கலத்தை தயார் செய்ய 10 முதல் 12 ஆண்டுகள் தேவைப்படும்போது, ஐக்கிய அரபு அமீரக விஞ்ஞானிகள் வெறும் 6 ஆண்டுகளில் அதைச் செய்து முடித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் போல்டர் லேபரேட்டரி ஃபார் அட்மாஸ்பியரிக் அண்ட் ஸ்பேஸ் பிசிக்ஸ் ஆய்வகத்தின் உதவியுடன் இந்த விண்கலத்தை ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் அறிவியல் பிரிவு அமைச்சர் ஓமர் சுல்தான் அல் ஒலமா கூறுகையில், “கரோனா வைரஸ் மிகப்பெரிய தடையாக இருந்தது. அதை ஐக்கிய அரபு அமீரகம் தகர்த்துள்ளது. ஐப்பானில் எங்கள் அறிவியல் விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து இந்த சாதனையைச் செய்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in