

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று கடந்த ஜூன்மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு உயிரிழப்பு 1.40 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காதான். அமெரிக்காவில் மட்டும் இதுவரை கரோனா தொற்றால் 38 லட்சத்து 33 ஆயிரத்து 321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17.75 லட்சம் மக்கள் கரோனாவிலருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பு கடந்த ஜூன் மாதத்தில் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அமெரி்க்காவில் கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 42 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் 817 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று வேர்ல்டோ மீட்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இருவாரங்களாக அமெரி்க்காவின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 50 மாநிலங்களில் 43 மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று மட்டும் அந்நாட்டில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானர் பாதிக்கப்பட்டனர்.
ஒவ்வொருவாரமும் அமெரிக்கா முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் சராசரியாக 5 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். அண்டை நாடான கனடாவில் கரோனா வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை 8,800 பேர் உயிரிழந்துள்ளனர், ஸ்வீடனில் இதுவரை 5,600 பேர் மட்டுேம உயிரிழந்தனர். ஆனால், அமெரிக்காவில் வாரந்தோறும் 5 ஆயிரம்பேர் கரோனாவில் உயிரிழந்து வருகின்றனர்.
வாரந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவில் உயிரிழந்து வருவதால், பிணவறையில் உடல்களை வைக்க முடியாமலும், கல்லறைகளில் அடக்கம் செய்ய இடம் இல்லாமலும் புதிதாக இடத்தைத் தேடி ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு அதிகாரிகள் அலைந்து வருகின்றனர் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
அரிசோனாவில் உள்ள மரிகோபா கவுன்டியில் 280 உடல்களைப் பாதுகாக்கும் அளவுக்கு 14 குளிர்பதன பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் அன்டோனியா, பெக்ஸார் நகரங்களில் 180 உடல்களை பாதுகாக்கும் வகையில் 5 குளிர்பதன பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கரோனாாவில் உயிரிழப்பு கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.